புதுக்கோட்டையில் தேர்தல் பயிற்சி வகுப்பில் இருந்து – சுவர் ஏறி குதித்து வெளியேறிய ஆசிரியர்கள்: சமூக வலைதளங்களில் வைரலாகும் படங்கள் | election duty training

651784

புதுக்கோட்டையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நேற்று முன்தினம் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அனைவருக்கும் மதிய உணவு அங்கேயே வழங்கப்பட்டது. பயிற்சியின் இடையில் யாரும் வெளியே சென்றுவிடக்கூடாது என்பதால் வாசல் கதவு பூட்டப்பட்டு இருந்தது.

முதல் கட்ட பயிற்சியின்போது பல்வேறு இடங்களில் காலையில் வந்தவர்கள் பாதியிலேயே சென்றுவிட்டார்கள். எனவே, பயிற்சி முடியும் வரை யாரும் வெளியே செல்லக்கூடாது’ என பயிற்சி அளித்தவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

பயிற்சி முடியும் வரை இருக்க முடியாத ஆசிரியர்கள் சிலர் சுவர் ஏறிக் குதித்து வெளியேறினர். இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறியபோது, “இந்தப் பயிற்சியை 3 நாட்கள் நடத்தத் தேவையில்லை. அதிலும் நாள் முழுக்க பயிற்சி பெறும் அளவுக்கு ஒன்றும் இல்லை. யாராவது பயிற்சி அளித்தால்கூட ஆர்வத்தோடு கேட்கலாம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் வீடியோவை ஒளிபரப்பியே நேரத்தை கழிக்கின்றனர். இதுபோன்ற பயிற்சி அளிப்பதை கல்வித் துறையினரிடம் ஒப்படைத்தால் எளிதாக நடத்திவிடுவர்” என்றனர்.

வருவாய்த் துறையினர் கூறியபோது, “தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி பயிற்சி தரப்படுகிறது. பிறருக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டியவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது வேதனைக்கு உரியது” என்றார்.



நன்றி!

Exit mobile version