புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் கண்டெடுப்பு | kalmaran found in pudukkottai

715123
kalmaran-found-in-pudukkottai

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நரிமேட்டின் ஒரு பகுதியில் கூழாங்கல், சுண்ணாம்பு கற்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வாளரான புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, 15 செ.மீ. நீளம், 10.5 செ.மீ. அகலத்தில் கல்மரம் ஒன்றை கண்டெடுத்தார். அதை, மேலாய்வுக்காக பொற்பனைக்கோட்டையில் ஆகழாய்வு பணியை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இ.இனியனிடம் நேற்று ஒப்படைத்தார்.

இதுகுறித்து எஸ்.பாண்டியன் கூறியது:

இந்த கல்மரமானது, சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்தது. அதாவது, தற்போதுள்ள பூக்கும் தாவரங்களான ஆஞ்சியோஸ்பெர்முக்கு முந்தைய ஜிம்னோஸ்பெர்ம் வகையைச் சேர்ந்தது. இது அரிய தொல்லியல் பொருளாக கருதப்படுகிறது. இப்பகுதியை தமிழக அரசு ஆய்வுக்கு உட்படுத்தினால், மேலும் இதுபோன்ற அரிய தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் என்றார்.

ஏற்கெனவே, கடந்த 2016-ல் இதே பகுதியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டெடுக்கப்பட்ட கல்மரம் ஒன்று புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version