புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த தேர்தலைவிட வாக்குப்பதிவு குறைவு | Voting down in pudukottai

656075

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த தேர்தலைவிட வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் 2 லட்சத்து ஓராயிரத்து 521 வாக்காளர்கள், விராலிமலை தொகுதியில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்கள், புதுக்கோட்டையில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 972 வாக்காளர்கள், திருமயத்தில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 829 வாக்காளர்கள், ஆலங்குடியில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 280 வாக்காளர்கள், அறந்தாங்கி தொகுதியில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 981 வாக்காளர்கள் என, மொத்தம் 13 லட்சத்து 52 ஆயிரத்து 702 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில், கந்தர்வக்கோட்டை தொகுதியில் 74.45 சதவீதம் பேர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தனர். இதேபோன்று, விராலிமலையில் 85.43 சதவீதம், புதுக்கோட்டையில் 72.94 சதவீதம், திருமயத்தில் 75.85 சதவீதம், ஆலங்குடியில் 78.47 சதவீதம் மற்றும் அறந்தாங்கியில் 70.21 சதவீதம் என, சராசரியாக 76.14 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது. அதாவது, மொத்த வாக்காளர்கள் 13 லட்சத்து 52 ஆயிரத்து 702 பேரில் 10 லட்சத்து 30 ஆயிரத்து 4 பேர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்துள்ளனர்.

இதற்கு முன்பு கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் 78.2%, விராலிமலையில் 84.27%, புதுக்கோட்டையில் 74.87%, திருமயத்தில் 76.31%, ஆலங்குடியில் 79.47%, அறந்தாங்கியில் 72.14% என, மாவட்டத்தில் சராசரியாக 77.42 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது.

2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது கந்தர்வக்கோட்டை தொகுதியில் 75.59%, விராலிமலையில் 79.83%, புதுக்கோட்டையில் 70.75%, திருமயத்தில் 73.09%, ஆலங்குடியில் 77.21%, அறந்தாங்கியில் 68.89% என, சராசரியாக 74.1 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை 5-வது இடத்தைப் பிடித்திருந்தாலும் மாவட்டத்தின் சராசரி வாக்குப்பதிவானது கடந்த 2 தேர்தல்களோடு ஒப்பிடுகையில் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி!

Exit mobile version