சென்னையில் விற்பனையாகாத வீட்டு வசதி வாரிய வீடுகளை வாடகைக்கு வழங்க நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி தகவல் | Action to provide Housing Board houses on rent

916921

சென்னை: சென்னை, நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெறும் திட்டப்பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். இதில் வீட்டுவசதி வாரியதலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆய்வு முடிவில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்பகுதியில் முதலில் 62 வீடுகள் இருந்தன. இந்த வீடுகள் மிக மோசமாக பழுதடைந்திருந்ததால், அவை அகற்றப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 96 சென்ட் நிலத்தில், 102 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இன்னும் 10 சதவீத பணிகள் மீதமுள்ளன. மிக விரைவாக முடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டு, ஒப்பந்ததாரர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். 102 வீடுகளும் தற்போது விற்கப்பட்டுவிட்டன. வாங்கியவர்கள் கூறும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு 1.48 லட்சம் சதுரடி பரப்பில், 1,192 முதல் 1,542 சதுர அடி வரையில் வீடுகள் உள்ளன. சதுர அடி ரூ.9,892-க்கு விற்கப்படுகிறது. ஒரு வீடு ரூ.1.38 கோடி முதல், ரூ.1.52 கோடி வரை வருகிறது.

வீட்டுவசதி வாரியம் சார்பில் 135 இடங்களில் வாடகை குடியிருப்புகள் உள்ளன. இவற்றில்61 இடங்களில் வாடகை குடியிருப்புகள் பழுதடைந்திருந்ததாக தகவல் வந்தது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுவசதி வாரிய இடங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இனி செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகள் அனைத்தும் விற்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்கக்கூடாது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

நெல்லை, புதுக்கோட்டையில் காலிமனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிலம் அதிகஅளவில் இருப்பவர்களிடம் இருந்து விருப்ப அடிப்படையில் இணைந்து செயல்படும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிலம் மேம்பாட்டுப்பணிகளை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தும் என்றார்.

நன்றி!

Exit mobile version