தாமிரபரணி நதியின் பெயரை ‘பொருநை’ என மாற்ற கோரிய வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு | High Court directs Tamil Nadu government to change name of Tamiraparani river to ‘Borunai’ in 12 weeks

909109

மதுரை: தாமிரபரணி நதி பெயரை பொருநை ஆறு என மாற்றம் செய்வது தொடர்பாக தமிழக அரசு 12 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.எம்.ஏ.காந்திமதிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. தாமிரபரணி வற்றாத ஜீவ நதியாகும். தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். இதன் தமிழ் பெயர் பொருநை நதியாகும்.

திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரிய புராணம் என பல தமிழ் இலக்கியங்களில் தாமிரபரணி பொருநை நதி என்றே அழைக்கப்படுகிறது. இதனை பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்கள், தமிழறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கி.பி.1011 ஆண்டில் பொறிக்கப்பட்ட முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டிலும் பொருநை நதி என்றே உள்ளது. இதனால் தாமிரபரணி நதியின் பெயரை பொருநை நதி என மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இ.பினேகாஸ், பி.பாண்டீஸ்வரன் வாதிட்டனர்.

பின்னர் நீதிபதிகள், ”வடமொழி பெயரில் அழைக்கப்படும் தாமிரபரணி நதியின் பெயரை, சங்ககால தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பாடல்களில் குறிப்பிட்டுள்ளபடியும் தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் தூய தமிழ் பெயரான பொருநை ஆறு என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக தமிழக அரசு 12 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

நன்றி!

Exit mobile version