என்றும் என் இதயத்தில்! கவிஞர் இரா. இரவி

kadhal tamil deepam yainavail

என்றும் என் இதயத்தில்!

முதல் காதல் மூச்சு உள்ளவரை நினைவிருக்கும்
முகம் இதயத்தில் கல்வெட்டாக பதிந்திருக்கும்!

நிறைவேறாமல் தோற்றாலும் அழிவதில்லை
நினைவுகளில் என்றும் வாழ்ந்திருக்கும்!

பசுமரத்து ஆணி போல நன்கு நெஞ்சத்தில்
பதிந்து இருக்கும் பசுமையான நினைவுகள் !

இசைஞானியை இருவருக்கும் பிடித்திருந்தது

இசைஞானி பாடல் இருவரும் ரசித்தோம் !

கவிதை இருவருக்கும் பிடித்திருந்தது
கவிதை வாசிக்கையில் உன் நினைவு!

மலர்கள் நம் இருவருக்கும் பிடித்திருந்தது
மலர்கள் பார்க்கையில் உன் நினைவு!

உனக்குப் பிடித்தவை எனக்கும் பிடித்தன
எனக்குப் பிடித்தவை உனக்கும் பிடித்தன!

நாம் இணைவது சிலருக்குப் பிடிக்கவில்லை
நம் வாழ்க்கையில் விளையாடிப் பிரித்தனர்!

வருடங்கள் பல கடந்திட்டப் போதும்
வளமான நினைவுகள் வந்து போகின்றன!

கண்கள் காதலுக்கு முன்னுரை எழுதின
கண்கள் காதலுக்கு முடிவுரையும் எழுதின !

கண்ணீர் விட்டு கதறிடப் பிரிவு வந்தது
காலங்கள் கடந்தும் நினைவுகள் அகலவில்லை!

காதலில் தோற்றாலும் கவிதையில் வென்றேன்
காரணம் உன்னைப் பற்றிய உயர்ந்த நினைவு !

ஏதோ ஒரு மூலையில் நீ வாழ்ந்திட்ட போதும்
இதோ மூளையின் ஒரு மூலையில் நிரந்தரமாய் நீ !

மறந்து விட்டதாக உதடுகள் உரைத்திட்ட போதும்
மறக்கவில்லை உள்ளம் என்பதை உண்மை!

நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது என்றும்
நின்னைப் பற்றிய பசுமையான நினைவுகள் !

என்றும் என் இதயத்தில் நிரந்தரமாய் இருப்பவளே
என் மூச்சு இருக்கும் வரை உன் நினைவிருக்கும்!  

நன்றி
கவிஞர் இரா.இரவி
Exit mobile version