முதுமை! கவிஞர் இரா. இரவி

muthumai tamildeepam

மதிக்க வேண்டுமென்று மனம் ஏங்கும்
மதிப்பதில்லை இளையதலைமுறை இன்று இங்கே!

நன்றியை மறந்து வருகின்றனர் இளையோர்
நாளெல்லாம் உழைத்ததை உணரவில்லை!

ஓடி ஓடி உழைத்து உருப்படி ஆக்கினார்கள்
உயர்ந்தபின் ஏறி வந்த ஏணியை தட்டி விடுகிறார்கள்!

தன்னை வருத்தி தன் பிள்ளையை வளர்த்தார்கள்
தன்னலவாதிகளாக பிள்ளைகள் மாறி விட்டனர்!

கடந்து வந்த பாதையை மறந்து விடுகின்றனர்
கண்கண்ட தெய்வங்கள் என்பதை அறிவதில்லை!

பெற்றோரை மதித்திடும் பிள்ளைகள் குறைவு
பெற்றோர் பலரும் வேதனையில் உள்ளனர்!

ஏன் பெற்றோம் என யோசிக்க வைக்கின்றனர்
என் பெற்றோர் என பெருமைப்படுவதில்லை!

வீடு பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும்
வளர்த்த பெற்றோருக்கும் இடம் தந்து மகிழுங்கள்!

முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்ப்பது
மூடர் கூட்டம் செய்திடும் மூடச் செயலாகும்!

பெற்றோரை மதித்து போற்றி நடத்தினால்
பெற்ற பிள்ளை நாளை உங்களைப் போற்றிடும்!

மூத்தோர் சொல் நன்மை தரும் அறிந்திடுக
முதியோரை மதிப்பது தமிழர்களின் நல்ல பண்பாடு!

முதுமையை ஒருபோதும் யாரும் ஒதுக்காதீர்கள்
முதுமை உங்களுக்கும் வரும் என யோசியுங்கள்!

நன்றி
கவிஞர் இரா.இரவி
Exit mobile version