மஞ்சள் பை திட்டத்தால் 20 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது – அமைச்சர் மெய்யநாதன் தகவல் | Plastic use is down by 20 percent manjal pai scheme

804524
804524

புதுக்கோட்டை: தமிழகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மஞ்சள் பை திட்டத்தால் 20 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளதாக மாநில சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 5 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘மீண்டும் மஞ்சள் பை’ திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுஉள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட பின்பு தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு 20 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தமிழகம் வந்தபோது இந்த திட்டத்தையும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக தமிழக முதல்வர் செயல்படுத்தி வரும் திட்டங்களையும் இந்தியா முழுவதும் கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளார்.

மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் வெற்றி அடைந்துள்ளோம். விரைவில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இயந்திரம் மூலம் ரூ.10-க்கு மஞ்சள் பை கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

அதேபோல, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறையை மேம்படுத்துவதற்கு இ-கம்யூட் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி மேற்கொள்வது, இ-பைக்குகள், சைக்கிள்களை பயன்படுத்துவது போன்ற திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது இதன் நோக்கம் என்றார்.

Exit mobile version