இரட்டைக் குவளை முறைக்கு எதிராக நடவடிக்கை; வேங்கைவயல் மக்களை கோயிலில் வழிபட வைத்த புதுக்கோட்டை ஆட்சியர் | SC & ST(Prevention of Atrocities) Act: Police arrested 2 people in pudukottai

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட ஊரில் இரட்டைக் குவளை முறை கடைபிடித்த, கோயிலுக்குள் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததாக 2 பேரை போலீஸார் இன்று (டிச.27) கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே வேங்கை வயலில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில நாட்களாக சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சந்தேகத்தின் பேரில் பார்த்தபோது, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மூலம் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் நேரில் சென்று விசாரித்தனர். பின்னர், குடிநீர் தொட்டி உடனே கழுவி சுத்தம் செய்யப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், அங்கு இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஆட்சியர் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் வேங்கைவயலுக்கு நேரில் சென்றனர். அப்போது, இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில் இரட்டைக் குவளை முறை இருப்பதாகவும், அங்குள்ள ஐயனார் கோயிலுக்கு தங்களை அனுமதிப்பதில்லை எனவும் வேங்கைவயல் மக்கள் புகார் தெரிவித்தனர்.

1672140670355

இதையடுத்து, வேங்கைவயல் மக்களை ஐயனார் கோயிலுக்கு ஆட்சியர் கவிதா ராமு அழைத்துச் சென்று வழிபடச் செய்தார். மேலும், இப்பகுதியினரை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் எனவும் கோயில் நிர்வாகத்தினரும் ஆட்சியர் அறிவுறுத்தினார். அப்போது, இறையூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கம்மாள் (35) என்பவர் வேங்கைவயல் மக்களை ஐயனார் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என சாமியாடிக் கொண்டு கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பெண் குறித்தும், இரட்டைக் குவளை முறை கடைபிடிப்பது குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து, இரட்டைக் குவளை முறையை கடைபிடித்து வந்த இறையூரைச் சேர்ந்த மூக்கையா (57), வேங்கைவயல் மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த சிங்கம்மாள் ஆகியோர் மீது வெள்ளனூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ராம்கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி!

Exit mobile version