புதுக்கோட்டை/திண்டுக்கல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் ஒப்பந்ததாரர்கள் இருவரது வீடுகளில் அமலாக்கத் துறையினர் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் ஆற்றுமணல் விற்பனையில் முறைகேடுநிகழ்ந்ததாக எழுந்த புகாரைஅடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணல் ஒப்பந்ததாரர்களான வல்லத்திராகோட்டை முத்துப்பட்டணம் எஸ்.ராமச்சந்திரன், கறம்பக்குடி குளந்திரான்பட்டு கரிகாலன் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்டோரின் வீடு,அலுவலகங்கள், மணல் குவாரிகள், சேமிப்புக் கிடங்குகள் என 25-க்கும்மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 3 நாட்கள்சோதனை நடத்தினர். அப்போதுபல ஆவணங்களை கைப்பற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சோதனையைத் தொடர்ந்து, மணல் குவாரிகள் படிப்படியாக மூடப்பட்டன. பின்னர், அங்கிருந்த பெரும்பாலான வாகனங்களுடன், பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், முத்துப்பட்டணம்ராமச்சந்திரன், குளந்திரான்பட்டு கரிகாலன் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத் துறையினர் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்றுஇரவு வரை நீடித்தது.
திண்டுக்கல் தொழிலதிபர்: திண்டுக்கல் ஜிடிஎன் சாலையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ரத்தினம். இவர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த செப். 12, 13-ம் தேதிகளில் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்தது.
இந்நிலையில், நேற்று 2-வதுமுறையாக தொழிலதிபர் ரத்தினத்தின் பங்களாவில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது.
சோதனையின்போது ரத்தினம் மற்றும் அவரது 2 மகன்களும் இல்லாத நிலையில், ரத்தினத்தின் மனைவி செல்வி மட்டும் பங்களாவில் இருந்தார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை குறித்த விளக்கங்களை கூறியதுடன், சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாகக் கூறப்படுகிறது.
2016-ல் மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது, தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி ரத்தினத்தின் பங்களா, அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
