ஆளுநருடன் சண்டையிட தயாராக இல்லை: சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கருத்து | Not Ready to Fight with Governor: Law Minister S. Raghupathi Comments
புதுக்கோட்டை: துணை வேந்தர் தேடுதல் குழுவை ஆளுநர் திரும்பப் பெற்ற விவகாரத்தில், தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி ஆளுநருடன் சண்டையிடுவதற்கு தயாராக இல்லை என தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடுதல் குழுவைத் திரும்பப் பெறுவதாக ஆளுநர் அறிவித்துள்ளார். தமிழக அரசு தான் துணை வேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுத்துள்ளார். ஆளுநரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
அதேவேளையில், நீதிமன்றத்தின் உத்தரவு, தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லி, ஆளுநருடன் சண்டையிடுவதற்கு தமிழக அரசு தயாராக இல்லை. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சொந்த காரணத்துக்காக ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இருப்பினும், அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்று சென்னை சென்ற பிறகுதான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.