புதுக்கோட்டை: இந்து மத பண்டிகைகளுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என்பதற்கு மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று (மே 9) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ”திராவிட மாடல் காலாவதியாகவில்லை எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. இதை இந்தியா முழுவதும் தமிழக முதல்வர் கொண்டு செல்வார். எந்த மசோதாவையும் நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. ஒன்று கையெழுத்திட வேண்டும். இல்லையேல், திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் அனைத்தும் மிக முக்கியமானவை. ஆனால், வேண்டுமென்றே ஆளுநர் இழுத்தடித்து வருகிறார்.
தமிழகத்தில் சட்டம் கொண்டு வருவதையும் அதை திரும்பப் பெறுவதையும் தமிழக அரசுக்கான பின்னடைவாக பார்க்கத் தேவை இல்லை. அந்த சட்டத்தை மக்கள் மன்றத்தில் விவாதிக்கும்போது அது வேறு விதமான கண்ணோட்டத்துக்கு கொண்டு செல்லப்படுவதால் அதைத் திரும்பப் பெறுவதற்கான துணிச்சலும், தகுதியும் எங்களுக்கு இருக்கிறது என்பதாகவே அதை பார்க்க வேண்டும்” என்றார்.
‘எல்லோரையும் சமமாக பார்க்கும் தமிழக முதல்வர், இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாடும் தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறுவதில்லை என்ற எனது கேள்விக்கு இதுநாள் வரை பதிலில்லை’ என்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஒருவர் தனக்குத்தானே வாழ்த்துக் கூறிக் கொள்ளத் தேவை இல்லை. அதுபோல, இந்து பண்டிகைகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துக் கூறத் தேவையில்லை. எனவே, கிறிஸ்தவ, இஸ்லாம், சீக்கிய மதம் போன்ற பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வர் வாழ்த்துத் தெரிவிக்கலாம் என்பது எனது கருத்து. இது முதல்வரின் கருத்து அல்ல.
கோவையில் குண்டு வெடிப்பு நடந்ததை வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுகிறார் ஆளுநர் ரவி. ஆனால், சம்பவம் நடந்த 2 நாட்களில் அதை என்ஐஏ விசாரணைக்கு தமிழக முதல்வர் பரிந்துரை செய்தார். ஆனால், கர்நாடகாவில் நடந்த சம்பவத்துக்கு அந்த மாநில அரசு 15 நாள் காத்திருந்து என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்ததையும், மணிப்பூர் எரிந்து வருவதையும என்னவென்று சொல்வது? முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான வழக்குகளில் சில வழக்குகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982