கருத்தரங்கம், மாரத்தான், படகு சவாரி, சுற்றுலா, குறும்படம், கலை இலக்கியப் போட்டிகள் எனப் புதுக்கோட்டையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சுற்றுலா தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் உட்பட அனைவரும் சுற்றுலா தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு பனியன்களை அணிந்துகொண்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (செப்.28) குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பிறகு, புதுக்கோட்டையில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் சுற்றுலா தின சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ’பெருங்கற்கால சின்னங்கள்’ எனும் தலைப்பில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் சு.ராஜவேலு, ’புதுக்கோட்டை வரலாற்றில் மதநல்லிணக்கச் சான்றுகள்’ எனும் தலைப்பில் முன்னாள் அருங்காட்சியக உதவி இயக்குநர் ஜெ.ராஜாமுகமது, ’மாவட்ட குடைவரைக் கோயில்கள்’ எனும் தலைப்பில் தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன், ’புதுக்கோட்டையின் கோட்டைகள்’ எனும் தலைப்பில் தொல்லியல் ஆய்வாளர் ஆ.மணிகண்டன் ஆகியோர் பேசினர்.
இங்கு, களிமண் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களின் கண்காட்சி அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும், புதிய பேருந்து நிலையத்தில் சுற்றுலா தின பலூன் பறக்கவிடப்பட்டது.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் ஓட்டமானது, நகராட்சி அலுவலகம், அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் விளையாட்டு அரங்கை அடைந்தது. இதுதவிர, சைக்கிள் பேரணி தனியாக நடைபெற்றது. இப்பேரணியானது, மாவட்ட விளையாட்டரங்கில் இருந்து மாலையீடு, டிவிஎஸ் கார்னர், பழைய பேருந்து நிலையம், கிழக்கு ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, பால்பண்ணை வழியாக மீண்டும் விளையாட்டு அரங்கை அடைந்தது.

இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், மாவட்டச் சுற்றுலா அலுவலர் நெல்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுமட்டுமின்றி, மீமிசல் அருகே முத்துக்குடா பகுதியை மாணவர்கள் சென்று பார்வையிட்டதோடு, படகுகள் மூலம் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 4 பேருந்துகளில் 3 பிரிவாகத் தொடங்கிய சுற்றுலாப் பயணத்தை ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார். இக்குழுவினர், ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றைக் கூறும் இடங்களான குன்றாண்டார்கோவில், விசலூர், மலையடிப்பட்டி, நார்த்தாமலை, திருமயம், கொடும்பாளூர், திருவேங்கைவாசல், ஆவூர், காட்டுபாவாபள்ளிவாசல், ராஜகுளத்தூர், திருக்கோகர்ணம் போன்ற இடங்களை வரலாற்று ஆய்வாளர்களுடன் சென்று பார்வையிட்டனர்.

மேலும், மாணவர்களுக்காக மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பற்றிய குறும்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, முறையே ரூ.10,000, ரூ.5,000, ரூ.3,000 என முதல் 3 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான படைப்புகளை செப்.30-ம் தேதி வரை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் தேர்வு செய்யப்படுவோருக்கு, பின்னர் பரிசு வழங்கப்பட உள்ளது.
தமிழகத்திலேயே அதிக தொல்லியல் சின்னங்கள், சித்தன்னவாசல் போன்ற சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுலா தினம் விரிவாகக் கொண்டாடப்படுவது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982