தேசிய வலிப்பு நோய் தினம்: என்ன காரணம், எப்படி குணப்படுத்தலாம்? | National Epilepsy Day 2020
தேசிய வலிப்பு நோய் தினம் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 17-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கம் ஆகும்.
எபிலெப்சி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வலிப்பு நோய் மிகவும் பரவலாகவும் அதிகமாகவும் காணக்கூடிய ஒரு நரம்பு மண்டல நோய். எபிலாம்பானீன் (Epilambanein) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து, எபிலெப்சி என்ற சொல் வழக்குக்கு வந்தது.
ஒருவருக்கு வலிப்பு வரும்போது கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். வாயில் நுரை தள்ளும். கண்கள் மேலே சுழன்று, நாக்கு, பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழியச் சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார். சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இந்த நிகழ்வுக்குப் பெயர் வலிப்பு (Fits/ Seizures/ Convulsions). ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால், அவருக்கு வலிப்பு நோய் (Epilepsy) இருப்பதாகக் கொள்ள வேண்டும்.
எப்படி ஏற்படுகிறது?
மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்தச் செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின் புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன.
வலிப்பு வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
> அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்கவையுங்கள்.
> சட்டைப் பொத்தான், இடுப்பு பெல்ட் போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.
> மின்விசிறி/ கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.
> அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.
> மூக்குக் கண்ணாடி, செயற்கை பல் செட்டை அகற்றிவிடுங்கள்.
> உமிழ்நீர் வழிந்தால் துடைத்து விடுங்கள்.
> ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவசியம். அதன்பின், சிறப்பு மருத்துவரிடமோ அல்லது பாதிக்கப்பட்டவர் ஏற்கெனவே சிகிச்சை பெறும் மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள். வலிப்பு வந்தவருக்குச் சிகிச்சை பெறச் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விளைவுகள் உடலில் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
என்ன சிகிச்சை?
வலிப்பின் வகை, பாதிக்கப்பட்டவரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து மாத்திரை / மருந்து பரிந்துரை செய்யப்படும். வலிப்பை ஆரம்ப நிலையில் கவனித்துவிட்டால் ஒன்று அல்லது இரண்டு வகை மாத்திரைகளே போதும். மாத்திரைகளை ஒருநாள்கூட விடாமல் உட்கொண்டு முறையாகச் சிகிச்சை பெறுகிறவர்களில், 60 முதல் 70 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவதை முழுவதுமாகத் தடுத்துவிடலாம்.
மருந்து / மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பித்து, 3 ஆண்டுகள்வரை வலிப்பு வரவில்லை என்றால், மாத்திரைகளைச் சிறிது சிறிதாகக் குறைத்து, பின்னர் முழுவதுமாக நிறுத்திவிடலாம். மாத்திரைகளை நேரம் தவறி உட்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, உடனடியாக நிறுத்துவதோ கூடாது. வலிப்புக்கான சிகிச்சையில் இதுதான் முக்கியம்.
2 முதல் 3 சதவீத நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்துகள் பலன் அளிப்பதில்லை. அவர்களுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் / பெட் ஸ்கேன் மூலம் மூளையில் எந்த இடத்தில் வலிப்பு நோய் தொடங்குகிறது என்று கண்டுபிடித்து, அந்த இடத்தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் மைக்ரோ அறுவை சிகிச்சை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்தச் சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம் வலிப்பு நோயிலிருந்து இவர்கள் முற்றிலும் விடுபடமுடியும்.
நன்றி: மருத்துவர் கு.கணேசன்