செய்திகள்நம்மஊர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் துளிகள்: மாவட்டங்களில் வாக்குப்பதிவு நிலவரம் | Urban Local Bodies Election: People cast their vote

தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இன்று காலை 7 மணி தொடங்கி வாக்குப்பதிவு நடக்கிறது. தலைநகர் சென்னையில் காலை வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆகியோர் வாக்களித்தனர்.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலைபார்வையிட சிறப்புப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டந் தோறும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இனியாவது பிரச்சினை தீரும்! புதுக்கோட்டையில் காலையில் இருந்தே மிகுந்த உற்சாகத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளது. 8 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக சின்னச்சின்னப் பிரச்சினைகளுக்குக் கூட அதிகாரிகளையே நாடவிருந்தது. இனி மக்கள் பிரதிநிகளை நாடி தீர்வு காணலாம் என்பதால் வாக்களிக்க வந்ததாகக் கூறினர்.

இயந்திரக் கோளாறு: நெல்லையில் ஏர்வாடியில் உள்ள 2 ஆம் எண் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஆனதால் அங்கு வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூரிலும் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறானது. இவ்வாறாக கோளாறு ஏற்படும் வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக 1 மணி நேரத்தில் மாற்ற ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மதுரையில் காலையிலேயே ஆட்சியர் அனீஷ் சேகர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். மதுரையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

பொள்ளாச்சியில் ஆர்வத்துடன் வாக்களிக்கக் காத்திருக்கும் மக்கள்: படம்:எஸ்.கோபு

பொள்ளாச்சி நகராட்சியில் வாக்காளர்களுக்கு கிருமிநாசினி மற்றும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் வாக்களிக்க உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

வால்பாறையில் சாலை மறியல்: வெளியூரில் தங்கி உள்ள வால்பாறை பொதுமக்கள் வாக்களிக்க தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து வசதி இல்லாததால் இன்று பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலத்தில் விறுவிறுப்பு: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சேலம் மாநகராட்சி 56-வது வார்டுக்குட்பட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வீரலட்சுமி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆர்வமுடன் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்களித்து வருகின்றனர்.

படம்: எஸ்.குருபிரசாத்

சென்னையில், விருகம்பாக்கம் வாக்குச்சாவடியில் வாக்களித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பொதுமக்கள் தவறாமல் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வேலூரில் ஆய்வு செய்த அதிகாரிகள்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், டிஐஜி ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், தேர்தல் மேற்பார்வையாளர் பிரதாப், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள்.ஆய்வு செய்தனர்.

படம்: வி.எம்.மணிநாதன்

முதன் முதலாய்.. வேலூர் மாநகராட்சி தேர்தலில் காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் முறையாக இளம் வாக்காளர்கள் உற்சாகத்துடன் வாக்களித்தனர்.

படங்கள்: வி.எம்.மணிநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *