செய்திகள்நம்மஊர்

புதுக்கோட்டையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திக்குமுக்காடும் நோயாளிகள்; கூடுதல் ஆக்சிஜன் வழங்க கோரிக்கை | Lack of oxygen in pudukottai

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க கூடுதலாக ஆக்சிஜன் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா நோயாளிகளுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இங்குள்ள ஐசியூ மற்றும் பிற வார்டுகளில் உள்ள 558 ஆக்சிஜன் படுக்கைகளும் கடந்த 2 நாட்களுக்கும் முன்பே நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் காலி படுக்கைகள் இல்லாத சூழலில், இருப்பதாக அரசு இணையதளத்தில் தெரிவித்து வருவதால் பிற இடங்களில் இருந்து வந்து ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர்.

இதேபோன்று, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களும் சிகிச்சை பலனின்றி அதிக எண்ணிக்கையில் இறக்கின்றனர்.

கூடுதல் ஆக்சிஜன் வழங்குமாறு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அண்மையில் கோரிக்கை தெரிவித்தனர். ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியும் அரசுக்கு அவ்வப்போது தெரிவித்து வருகிறார். எனினும், இப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை.

இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலர் ஒருவர் கூறுகையில், “அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஆக்சிஜன் டாங்க் உள்ளது. இதில், நாளொன்றுக்கு குறைந்தது 5,000 லிட்டர் தேவையுள்ள நிலையில், 2,500 லிட்டர்தான் ஆக்சிஜன் கிடைக்கிறது.

அதோடு, ஆக்சிஜன் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இருப்பதைக்கொண்டு பெரும் முயற்சியோடு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், ஆக்சிஜன் இணைப்பு உள்ளிட்ட வசதியுடன்கூடிய படுக்கைகள் கூடுதலாக உள்ளன. அதைத்தான் இணையதளத்திலும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஆக்சிஜன்தான் பற்றாக்குறை உள்ளது” என்றார்.



நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *