செய்திகள்நம்மஊர்

புதுக்கோட்டை – அரிமளம் அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் காவலர் உட்பட 2 பேர் உயிரிழப்பு | Pudukkottai – Arimalam 2 People, Including a Policeman, were Killed when Bulls Hitted on Manju Virattu

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் காவலர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

அரிமளம் அருகே உள்ள கல்லூர் அரியநாயகி முத்து மாரியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழாவையொட்டி அங்குள்ள செம்முனீஸ்வரர் கோயில் திடலில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதனை புதுக்கோட்டை கோட்டாட்சியர் எஸ்.முருகேசன் தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

ஒரு கட்டத்தில் பார்வையாளர்களின் பகுதிக்குள் காளைகள் புகுந்ததால் பார்வையாளர்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். அப்போது, கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சேர்ந்தவரும், மீமிசல் காவல் நிலைய காவலருமான நவநீத கிருஷ்ணனை (32) ஒரு காளை முட்டித் தூக்கி எறிந்தது.

பலத்த காயமடைந்த அவர் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதேபோல, மஞ்சு விரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கே.புதுப்பட்டியைச் சேர்ந்த கே.சுப்பிரமணியன்(35) என்பவர் காளை முட்டியதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 63 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து, மஞ்சுவிரட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. உயிரிழந்த காவலர் நவநீத கிருஷ்ணனின் மனைவி சபரி, அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 8, 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இதேபோல, உயிரிழந்த சுப்பிரமணியனுக்கு மனைவி, 2 மாத கைக் குழந்தை உள்ளனர்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *