புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரான தம்பியை அழைத்துச் சென்ற அண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பொதுப்பணித்துறை பாசன ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது திருக்கோகர்ணம் காவல் நிலையத்தினர் இன்று (ஏப்.27) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கூத்தாடிவயல் ஏரியில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு 2019-ல் சவுடுமண் அள்ளும் பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து (23) கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், சக பணியாளர்களான திண்டுக்கல் மாவட்டம் பேயம்பட்டியைச் சேர்ந்த சின்னையா மகன் முத்துராஜா (31), சானார்பட்டியைச் சேர்ந்த செல்லாண்டி மகன் கருப்பசாமி (28), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே செவ்வூரைச் சேர்ந்த அய்யாவு மகன் பொன்னையா (22) ஆகியோர் மீது மணமேல்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மண் அள்ளும் பணிக்குத் தனது உறவினரான இசக்கிமுத்துவை ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவரும், பொதுப்பணித்துறையின் புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பிரிவு பாசன ஆய்வாளருமான ஆர்.வெங்கடேஷ்தான் (43) அழைத்துவந்து விட்டுள்ளார். இதனால், இசக்கிமுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வெங்கடேஷ் காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார்.
இந்த வழக்கு, புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் இன்று ஆஜரான பொன்னையா, தனது மூத்த சகோதரர் விஜயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, புதுக்கோட்டை அருகே செல்லுகுடி வயல் பகுதியில் சென்ற இவர்களை வழிமறித்து 3 பேர் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில், விஜயகுமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பொன்னையா தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து விசாரணை செய்த திருக்கோகர்ணம் போலீஸார், பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி வெங்கடேஷ், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் உட்பட 8 பேர் மீது இன்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சிலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982