புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கொத்தமங்கலத்தில் திமுக பிரமுகர் இன்று (மே 11) சாலை மறியலில் ஈடுபட்டார்.
கொத்தமங்கலத்தில் நீர்வளத்துறையின் கண்காணிப்பில் உள்ள பெரியகுளத்தில் 20 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பில் உள்ளது. தற்போது, அந்த குளத்தில் அரசு அனுமதியுடன் வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், அனுதிக்கப்பட்ட அளவில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அந்தக் குளத்தின் நீர்பாசன சங்கத் தலைவரும், திமுக பிரமுகருமான முத்துத்துரை கொத்தமங்கலம் கிழக்கு பேருந்து நிறுத்தம் அருகே கட்டிலில் தனியொருவராக அமர்ந்த படி இன்று சாலை மறியலில் ஈடுபட்டார்.
அப்போது, மழை, வெயிலுக்கு பிடித்துக் கொள்வதற்காக குடையும் கொண்டு வந்திருந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட முத்துத் துரையிடம் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கை விடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தினால் கொத்தமங்கலம் வழியாக புதுக்கோட்டை, கீரமங்கலம் இடையே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982