புதுக்கோட்டையில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் இன்று (மே 5) தீர்ப்பு அளித்துள்ளது.
புதுக்கோட்டை நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சுரேஷ் (32). இவர், 2019இல் 16 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கினார். பின்னர், கருக்கலைப்பு செய்வதற்காக மாத்திரைகளையும் கொடுத்துள்ளார்.
கருச்சிதைவு ஏற்பட்டதில் சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், ’’குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ், சிறுமியைத் தீவிர பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், சிறுமியைப் பல முறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்துக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்து, கருச்சிதைவு ஏற்படுத்திய குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.மேலும், இந்தச் சம்பவங்களை வெளியே சொல்லக்கூடாது என சிறுமி மற்றும் அவரது பெற்றோரை மிரட்டிய குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிபதி சத்யா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக அங்கவி ஆஜராகி வாதாடினார்.
மற்றொரு வழக்கில் தீர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் ராஜீவ் காந்தி (28). டைலரான இவர், மற்றவர்களுக்குத் தையல் கற்றுக் கொடுத்துள்ளார். இதையடுத்து, இவரிடம் தையல் கற்றுக்கொள்வதற்காக வந்த ஒரு சிறுமியைக் கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்துக் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ராஜீவ்காந்தியைக் கைது செய்தனர். புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், நீதிபதி ஆர்.சத்யா இன்று ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்தார்.

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982