யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் சேவைகள் முடங்கின; உலகளாவிய அளவில் பாதிப்பு | YouTube, Gmail is down
யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் சேவைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. இதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
பிரபல வீடியோ தளமான யூடியூப், மின்னஞ்சல் சேவையான ஜிமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் மீட், கூகுள் க்ளாஸ்ரூம் உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் சேவைகள் முடங்கியுள்ளன. சர்வதேச அளவில் பல பயனர்கள் இந்தப் பிரச்சினையைச் சந்தித்துள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) மதியத்தில் இருந்து கூகுளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மாலையில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயனர்கள், தங்களால் மின்னஞ்சலை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை என்று சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்துள்ளனர். அதேபோல யூடியூப் தளத்தையும் பயன்படுத்த முடியவில்லை என்று ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இப்படியான சேவைகள் பாதிக்கப்படுவதைக் கண்காணிக்கும் ’தி டவுன் டிடெக்டர்’ என்கிற தளம், கிட்டத்தட்ட 54 சதவீத பயனர்கள் யூடியூப் தளத்தைப் பார்க்க முடியாமல் பாதிப்பைச் சந்தித்ததாகவும், அதே நேரம் 42 சதவீதப் பயனர்களால் வீடியோக்களைக் காண முடியவில்லை என்றும் கூறியுள்ளது.
அதேபோல 75 சதவீத ஜி-மெயில் பயனர்களால் லாகின் செய்ய முடியவில்லை என்றும் 15% பேரால் இணையதளத்தைத் திறக்க முடியவில்லை என்றும் 8% பயனர்களால் மின்னஞ்சலைப் பெற முடியவில்லை என்றும் ’தி டவுன் டிடெக்டர்’ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யூடியூப் தரப்பின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், ’’இதுகுறித்து நாங்கள் அறிந்துள்ளோம். பிரச்சினையைச் சரிசெய்ய முயன்று வருகிறோம். விரைவில் அதுகுறித்து அறிவிக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.