விளைநிலங்களில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் முயற்சியே உரம் விலை உயர்வு: விவசாயத் தொழிலாளர் சங்கம் குற்றச்சாட்டு | Agricultural workers blame the federal government
உரங்களின் மீதான விலை உயர்வு என்பது விளைநிலங்களில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் மத்திய அரசின் செயல் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் இன்று (ஏப்.18) நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார்.
மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர், மாநில செயலாளர்கள் எம்.சின்னதுரை, ஏ.பழனிசாமி, துணைத் தலைவர்கள் கே.பக்ரிசாமி, பி.வசந்தாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த கையோடு பல்வேறு கிராமங்களில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், கரோனா நோய்த்தொற்று காரணமாக வெளியூரில் பணியாற்றிய தொழிலாளர்கள் சொந்தக் கிராமங்களுக்கு திரும்பி வருகின்றனர். எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சம்பளத்தையும், வேலை நாட்களையும் குறைக்காமல் வழங்க வேண்டும்.
இத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
கரோனா நோய் பரவல் தீவிரம் காரணமாக வேலையும், வருவாயும் இழந்து தவிக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் நிவாரணம் அளிக்க வேண்டும்.ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கரோனா காலம் முழுமைக்கும் இலவசமாக வழங்க வேண்டும்.
அனைத்து கிராமங்களிலும், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் நிலவு வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். உரங்களின் விலையை 60 சதவீதத்துக்கும் மேல் மத்திய பாஜக அரசு உயர்த்தி இருப்பது, விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றிவிட்டு விவசாய உற்பத்தி முறையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையாகும். எனவே, இதை எதிர்த்து தொடர்ந்து போராடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய ஆர்.சந்திரமோகனின் உருவப்படத்துகு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.