ஃபிளாஷ் ப்ளேயருக்கு விடை கொடுத்த அடோபி: விண்டோஸிலும் நீக்கம் | Adobe removes Flash components from Reader, Acrobat
ஃபிளாஷ் ப்ளேயருக்கு அடோபி நிறுவனம் அதிகாரபூர்வமாக விடை கொடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் சமீபத்திய பிடிஎஃப்பை இயக்குவதற்கான மென்பொருள்களில் ஃபிளாஷைப் பயன்படுத்தவில்லை. மேலும் சில முக்கியப் பாதுகாப்புப் பிரச்சினைகளையும் சரி செய்துள்ளது.
ஃப்ளாஷைச் சார்ந்து கொடுக்கப்பட்டிருந்த தேர்வுகள் தற்போது இன்னொரு டூல்பார் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Update, Add, Delete, Export, Archive ஆகிய தேர்வுகள் உள்ளன. இந்த வருடத்தின் கடைசியில் ஃபிளாஷ் மென்பொருளை ஒட்டுமொத்தமாக நீக்கும் அடோபி நிறுவனம், ஃபிளாஷ் இல்லாத எதிர்காலத்துக்குத் தயாராகி வரும் அடோபி, மார்க் ஆடம்ஸ் என்பவரைத் தங்கள் நிறுவனத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துள்ளது.
இன்னொரு பக்கம் அடோபி ஃபிளாஷ் ப்ளேயரை நீக்குவதற்கான அப்டேட்டை மைக்ரோசாஃப்ட் தனது விண்டோஸ் பயனர்களுக்கு வெளியிட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் எக்ஸ்ப்ளோரர் என இரண்டு பிரவுசர்களிலும் ஃபிளாஷ் ப்ளேயர் இனி வேலை செய்யாது என்று அறிவித்துள்ளது.
ஹெச்டிஎம்எல் 5, வெப்ஜிஎல், வெப் அசெம்ப்ளி போன்ற மேம்பட்ட, பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் வந்துவிட்டதால் அடோபி தனது ஃபிளாஷ் ப்ளேயரை முடிவுக்குக் கொண்டு வருகிறது. ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும் தங்களின் வியாபாரத்துக்குத் தேவையான அமைப்புகளை இயக்க இந்த வருடத்தைத் தாண்டியும் ஃபிளாஷின் உதவி தேவைப்படலாம்.