“அரசியல்வாதி போல ஆளுநர் செயல்படுகிறார்” – சட்ட அமைச்சர் ரகுபதி கருத்து | Governor acting like a politician: Law Minister comments
புதுக்கோட்டை: தமிழக ஆளுநர் அரசியல்வாதியைப் போன்று செயல்படுகிறார் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற 3 புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிலுவையில் வைத்தால் நிராகரிப்பதாகத்தான் அர்த்தம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி உள்ளார். இவ்வாறு ஆளுநர் பேசுவது அரசியல் சட்ட வரையறையை மீறிய செயல் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
ஆளுநர் அரசியல்வாதியைப் போன்று செயல்பட்டு வருகிறார். 2-வது முறையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது குறித்து மக்கள்தான் தீர்ப்பு அளிப்பார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த நிதி பெற்றதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருப்பது குறித்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். அவர்களின் கருத்துதான் எனது கருத்தும்” என்றார்.
தமிழக சட்டப் பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “தமிழகம் பொறுமையைக் கடைபிடிக்கக் கூடிய மாநிலம். கருத்து மோதல்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் அனுசரித்து போகக்கூடிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. எனவே, ஆளுநர் விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் தெளிவான முடிவை எடுப்பார்” என்றார்.