அறந்தாங்கி: 3 ஆண்டுகளாக ஓவியப் போட்டியில் சாதிக்கும் அரசு பள்ளி மாணவர் | Pudukkottai District Aranthangi is a government school student who has been competing in painting for 3 consecutive years
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாநில அளவிலான ஓவியப் போட்டியில் சாதித்து வருகிறார்.
அறந்தாங்கி அருகே அரசர்குளம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ஹரிராஜ். இவர், சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். ஓவியத்தில் கைதேர்ந்த இவர், தனது வீட்டு சுவர்களில் இயற்கை காட்சிகளை வரைந்துள்ளார்.
மேலும், பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ளும் இவர், அரசின் சார்பில் நடத்தப்பட்ட கலா உத்சவ் போட்டியில் நிகழ் ஆண்டு சீதை திருமண காட்சியை தத்ரூபமாக வரைந்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.தேசிய போட்டியில் கலந்துகொள்ள தகுதி படைத்துள்ளார். இவரை ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி ஆகியோர் அண்மையில் பாராட்டினர்.
இதேபோன்று, கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த இவர், அதற்கு முந்தைய ஆண்டு 2-ம் இடம் பிடித்தார். ஏற்கெனவே, இந்திய அரசின் சின்னத்தை வாழை இலையில் வரைந்து ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ஸ்’ எனும் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.