ஒடிசா மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு ரயிலில் வந்த 80 டன் ஆக்சிஜன் | 80 ton oxygen
ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 80 டன் ஆக்சிஜன் திருச்சி குட்ஷெட்டுக்கு நேற்று வந்தது. பின்னர் இங்கிருந்து பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பணிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருநேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒடிசா மாநிலம் பிலாயில் இருந்து ரயில் மூலம் 80 டன் ஆக்சிஜன் திருச்சிக்கு வந்துள்ளது.
இவை இங்கிருந்து திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு 12 டன், தஞ்சாவூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 12 டன், ராஜா மிராசுதார் மருத்துவமனைக்கு 6 டன், புதுக்கோட்டைக்கு 8 டன், திருவாரூருக்கு 10 டன், நாகைக்கு 4 டன், கரூருக்கு 7 டன், நாமக்கல்லுக்கு 5 டன், திண்டுக்கலுக்கு 5 டன்,அரியலூருக்கு 2 டன், பெரம்பலூருக்கு 1 டன், கும்பகோணத்துக்கு 4 டன், மயிலாடுதுறைகு 4 டன் என 13 அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் தேவையான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. கரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தும் பணிசிறப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்காலத்திலும், எந்த சூழ்நிலையையும் மேற்கொள்ள அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உள்ள அரசு சித்தா கரோனா புத்துணர்வு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு, கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடி நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வுகளில் மாவட்டஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏஎஸ்.இனிகோ இருதயராஜ், ந.தியாகராஜன், அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின் குமார், பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.