ஆரோக்கியம்உறவுகள்வாழ்வியல்

”ஓ, இதான் பிரியாணியா?”- வாழ்க்கையிலேயே முதல் முறையாக பிரியாணி சாப்பிட்ட குழந்தைகள்- நெகிழ்ச்சி நிகழ்வு! | children eat biriyani for the first time

பிரியாணி- நம்மில் சிலரின் தினசரி உணவாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பழங்குடியினக் குழந்தைகளுக்கு பிரியாணி என்னும் உணவு இன்னும் கனவாகவே இருக்கிறது. அத்தகைய குழந்தைகளுக்கு சுமார் 70 கிலோ பிரியாணியைச் சமைத்து வழங்கி, மகிழ்ந்திருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன்.

ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடிக் குழந்தைகளுக்கு பிரியாணி சமைக்கப்பட்டு, சுடச்சுடப் பரிமாறப்பட்டிருக்கிறது.

பிரியாணி விருந்து

இதற்காக பர்கூரில் உள்ள கொங்காடை, போரதொட்டி, அக்னிபாவி, பேடரலா, சுண்டைப்போடு ஆகிய மலைக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் தாமரைக்கரை என்னும் பகுதிக்கு அனைத்துக் குழந்தைகளும் அழைத்து வரப்பட்டனர். பிரியாணி தயாராகும் வரை மேஜிக் கலைஞர், குழந்தைகளுக்கு சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். அத்துடன் ஏராளமான கதைகள் சொல்லப்பட்டன. படிப்பின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கப்பட்டது.

கோழி வறுவலுடன், ஆவி பறக்க சிக்கன் பிரியாணி தயாரானவுடன் சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

மலைவாழ் குழந்தைகள் 300 பேருக்கு பிரியாணி பரிமாறும் எண்ணம் எப்படி வந்தது? தொழிலதிபர் கண்ணனிடமே கேட்டோம்.

”சிறு வயதில் இருந்தே பிறருக்கு உதவிகள் செய்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. ஏழ்மை நிலையில் வளர்ந்து, முதல் தலைமுறையாகத் தொழிலை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். இதற்கு என் தந்தை சொல்லித் தந்த நேர்மையும் பிறருக்கு உதவும் மனப்பான்மையுமே முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்.

டெக்ஸ்டைல் தொழிலில் நேரடியாக 300 பேர் என்னிடம் பணிபுரிகின்றனர். மறைமுகமாக சுமார் 500 பேருக்கு வேலை கொடுக்கிறோம். அவர்கள் குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறேன். ஊழியர்களை ஆண்டுக்கு இருமுறை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வோம்.

பண்டிகை உணவான இட்லி, தோசை

ஆரம்பத்தில் சேலத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவினேன். இதற்கிடையே நண்பர் ஒருவர் பர்கூரில் உள்ள மலைவாழ் குழந்தைகளின் நிலை குறித்துப் பேசினார். நானும் நேரடியாகப் போய்ப் பார்த்தேன். அவர்களும் பேசிக் கொண்டிருக்கும்போது சாப்பாட்டைப் பற்றிப் பேச்சு வந்தது. ‘இட்லி, தோசை என்பது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை கால உணவு’ என்றனர். சிலருக்கு பிரியாணி என்ற பெயர்கூடத் தெரிந்திருக்கவில்லை.

இன்னும் சிலருக்கு பிரியாணி என்ற பெயர் தெரிந்தது, ஆனால் ருசித்திருக்கவில்லை. ‘அசைவம் என்பது எட்டாக்கனி’ என்று ஏக்கத்தோடு கூறியவர்களை, சாப்பிட வைத்து சந்தோஷப்படுத்த ஆசைப்பட்டேன். தாத்தாவின் நினைவு நாளான நவ.24-ம் தேதி பிரியாணி வழங்க முடிவெடுத்தேன்.

நண்பர்களின் உதவியுடன் பிரியாணி சமைக்கத் தேவையான பொருட்களை ட்ரக்கில் ஏற்றி, தாமரைக்கரைக்குப் பயணமானோம். 70 கிலோ பிரியாணியும் சிக்கன் வறுவலும் அங்கேயே தயாரானது. சுமார் 13 வயது வரையிலான சிறுவர், சிறுமிகள் 300 பேருக்கு அவற்றை வழங்கினோம். அத்தனை பேரும் ரசித்து, ருசித்து பிரியாணியை உண்டனர். இன்னும் சிலர் தயக்கத்துடன், ‘வீட்டுக்கும் இதை எடுத்துச் செல்லலாமா?’ என்று கேட்டனர். அவர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்.

எதுவும் ஈடாகாது

பயத்தை உடைக்க, சுய அறிமுகப் படலம் குழந்தைகளுக்கு இடையே நடத்தப்பட்டது. அசைவ உணவு தயாராகும் வரை குழந்தைகளுக்கு இனிப்பையும் சாக்லேட்டுகளையும் வழங்கினோம். ”தாத்தா- பாட்டி காலத்துல, அவங்க வேட்டையாடி அசைவம் சாப்பிட்டதா சொல்லிக் கேட்டிருக்கோம். ஆனா எங்களுக்கு இன்னிக்கு வரை அது கனவாவே இருந்தது. இன்னிக்கு அது தீர்ந்துருச்சு!” என்ற சிறுமியின் வார்த்தைகளுக்கு எதுவும் ஈடாகாது.

மலைவாழ் குழந்தைகளுக்கு அளித்த சாப்பாட்டால் மட்டுமே, அவர்களின் குறைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. ஏழ்மை நிலையில் இருந்தாலும் அந்தக் குழந்தைகள் அனைவரும் புத்திக்கூர்மையுடன் துறுதுறுவென இருந்தனர். அவர்களுக்கு நல்ல கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். படிப்புக்கான அனைத்து உதவிகளையும் செய்யத் திட்டமிட்டுள்ளேன்” என்கிறார் கண்ணன்.

வேட்டையாடி, அசைவத்தை மட்டுமே உண்டு வாழ்ந்த பழங்குடிகள் இன்று அசைவமே சுவைக்காமல் வளர்கின்றனர். இயற்கையின் குழந்தைகளான மலைவாழ் மக்களுக்கு போதிய ஊட்டச்சத்தும் தரமான கல்வி, சுகாதார வசதிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

– க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *