‘கூலி வேலை செய்து கனவைத் துரத்துகிறேன்’ – தங்கம் வென்று சாதித்த பாடி பில்டர் சங்கீதா உத்வேகப் பேட்டி | sangeetha from vaniyambadi wins gold
“எனக்கு சொந்தமாக வீடு இல்லை. எனது வருமானத்தில் பாதி வீட்டு வாடகைக்கே சென்றுவிடுகிறது. பிள்ளைகளின் மேற்படிப்புக்கு பணம் வசதி இல்லை. எனினும், இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையும், மன தைரியமும் எனக்கு உள்ளது” என்கிறார் தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு மற்றும் உடற்கட்டமைப்பு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற பாடி பில்டர் சங்கீதா.
2009-ஆம் ஆண்டு பெங்களூருவில் கூலி வேலை செய்துகொண்டிருந்த சங்கீதா, அங்கு பெண்கள் தினமும் ஜிம்-மிற்கு செல்வதை கவனித்து வந்திருக்கிறார். செங்கல் கற்களைத் தாங்கிச் செல்லும் சங்கீதாவுக்கு நாளடைவில் அப்பெண்களை பார்த்ததும் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. இதற்கிடையில், குடும்பச் சூழல் காரணமாக வேலையைவிட்டு சொந்த ஊரான வாணியப்பாடிக்கு செல்கிறார். அங்கும் ஜிம் கனவு சங்கீதாவை தொடர்ந்து இருக்கிறது. கூலி வேலை செய்தாலும் ஜிம் சென்று உடலை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கனவில் ஜிம்பில் சேர்ந்திருக்கிறார் சங்கீதா. ஜிம்மில் சேர வேண்டும் என்ற மன உறுதி அவரை தற்போது தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு மற்றும் உடற்கட்டமைப்பு போட்டியில் தங்கப்பதக்கத்தை வெல்ல வைத்திருக்கிறது. வறுமை எவ்வளவு அழுத்தினாலும், அதிலுருந்து மீண்டு தன் கனவை சாத்தியமாக்கி பயணிக்கும் சங்கீதா உடனான நேர்காணல்:
சங்கீதா… உங்களை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள்?
“என்னை நான் எப்போது பாடி பில்டராகவே அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். நான் பிறந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டம். எனது பெற்றோர்கள் இருவரும் கூலித் தொழிலாளர்கள். நான் பத்தாம் வகுப்புவரைதான் படித்தேன். அதன்பின் எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். திருமணம் ஆனதும் என்னால் எதையும் சாதிக்க முடியவில்லை. இதற்கிடையில் மனவேறுபாடு காரணமாக நானும் எனது கணவரும் பிரிந்துவிட்டோம். எனது கணவர் ஐந்து வருடத்திற்கு முன் இறந்துவிட்டார். எனக்கு இரண்டு பிள்ளைகள். நாங்கள் எனது பெற்றோருடன் வாடகை வீட்டில் இருக்கிறோம். கூலி வேலை செய்து எனது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்; கனவையும் துரத்திக் கொண்டிருக்கிறேன்.”
பாடி பில்டிங்கில் எப்படி ஆர்வம் வந்தது?
“பெங்களூரில் கூலி வேலை செய்யும்போதே ஜிம் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. மற்ற பெண்கள் எல்லாம் எடை குறைப்புகாக ஜிம் சென்றார்கள். நான் இதன்மூலம் எதாவது சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜிம் சேர தீர்மானித்தேன். அதன்பிறகு ஊருக்கு வந்ததும் வாணியம்பாடியில் பெண்களுக்கு உடற்பயிற்சி அளிக்கும் ஜிம்மில் சேர்ந்தேன். அங்கு நான் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து, பயிற்சியாளர் குமரவேல் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். ஜிம்மில் இருந்த மற்ற பிள்ளைகளும் என்னைப் பாராட்டினார்கள். நாளடைவில் குடும்ப வறுமைக் காரணமாக என்னால் ஜிம்மிற்கு செல்ல முடியவில்லை. இதனை எனது பயிற்சியாளரிடம் கூறினேன். பிறகு அவர் என்னைப் பற்றியும், எனது குடும்ப சூழலையும் உணர்ந்துகொண்டு என்னிடம் இனி கட்டணம் வாங்க போவதில்லை என்று தெரிவித்தார். நான் சரியான இடத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நான் பயிற்சிகளை தொடர்ந்தேன். ஜிம்மில் ஒருமுறை, எனது பயிற்சியாளர் குமரவேல் வாங்கிய பதக்கங்களை பார்க்கும்போது அவரிடம் நானும் அம்மாதிரியான பதக்கங்களை வாங்க வேண்டும் என்று கூறினேன். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாடி பில்டர் துறையை விவரித்தார். பாடி பில்டிங்கிற்கு இம்மாதிரியான ஆடை அணிய வேண்டும். இப்படிதான் போஸ்கள் கொடுக்க வேண்டும், உணவு சாப்பிட வேண்டும் என்று அனைத்தையும் கூறினார்.
நான் வாழ்கையில் அனைத்தையும் இழந்து விட்டேன். இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. நான் சாதிக்க வேண்டும் என்று கூறி, அவரிடம் பயிற்சிகளை தொடர்ந்தேன். 2020-ஆம் ஆண்டு முதல் முதலாக புதுக்கோட்டையில் நடந்த பாடி பில்டிங் போட்டி ஒன்றில் என்னை அறிமுகப்படுத்தினார். 200-க்கு மேற்பட்ட ஆண்கள் இருந்த போட்டியில் ஒரே பெண்ணாக நான் கலந்து கொண்டேன். அங்கு எனக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
2021-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு போட்டியில் அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. எனது தொடர் முயற்சியாலும், பயிற்சியாளர் குமரவேலின் தூண்டுதலாலும் தென்காசியில் 2022-ஆம் ஆண்டு பெண்களுக்கு இடையே நடந்த தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு மற்றும் உடற்கட்டமைப்பு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன்.”
நீங்கள் சந்தித்த சவால்கள்?
“நிறைய பேர் என்னை விமர்சித்தார்கள். இதற்கெல்லாம் அழகு தேவை, படிப்பு தேவை,பிள்ளைகள் இருக்கும் பெண்ணுக்கு எதற்கு இவை எல்லாம்… நான் உடுத்தும் ஆடை பற்றியும் விமர்சித்தார்கள். இதனைக் கேட்கும்போது ஜிம்மில் பல நாட்கள் அழுதிருக்கிறேன். எனது கணவர் மூலம் எனக்கு எந்த மகிழ்ச்சியும் கிடைக்கவில்லை. எனது மகிழ்ச்சிகாக நான் தேர்ந்தெடுத்தது இந்த ஜிம். என் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் என்று நம்பினேன். அவர்களின் விமர்சனங்கள், நான் வெற்றி பெற தூண்டுதலாக அமைந்தது.
உடற்பயிற்சிகாக ஒரு நாளை உணவுக்கு மட்டும் எனக்கு 500 ரூபாய் செலவாகும். என்னால் ஒரு நாளைக்கு ரூ.500 வரை செலவு செய்ய முடியவில்லை. எனது பயிர்சியாளர் குமாரவேல்தான் உணவு மற்றும் எனது பயிற்சிகளை பார்த்துக் கொண்டார். எனக்கென தனியாக பயிற்சியாளரையும் நியமித்தார். எனது பயிற்சியாளர் குமாரவேல் இல்லாமல் நான் இந்த சாதனையை செய்திருக்க முடியாது.”
பாடி பில்டர் துறையில் சாதிக்கும் பெண்களுக்கு நீங்கள் கூறுவது?
“நான் வெற்றி பெற்ற பிறகு எனக்கு எழுந்த கைதட்டல்களை நான் எனக்கு மட்டுமாக பார்க்கவில்லை. குடும்ப கஷ்டத்தால் தங்கள் கனவுகளை வீட்டினுள் அடைந்திருக்கும் ஒட்டுமொத்த பெண்கள் சார்பாக வாங்கும் அந்த கைதட்டல்களை பார்த்தேன். பாடி பில்டிங்குக்கு நாம் நிறைய கஷ்டபட வேண்டி இருக்கும். மனமும் மூளையும் ஒருங்கே இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை பெண்கள் என்ன நினைத்தாலும் சாதிக்கலாம். இந்தத் துறையில் பெண்கள் வர அச்சம் கொள்ள முக்கிய காரணம், பாடி பில்டிங்கில் இருந்தால் நமது உடல் மாறிவிடுமா என்பதுதான். நான் அவர்களுக்கு கூறுவது ஒன்றுதான்: எந்த அச்சமும் நீங்கள் கொள்ள வேண்டாம். உங்கள் பெண்மை மாறாது. மன உறுதியும், நம்பிக்கையும் இருந்தால் நாம் எதனையும் சாதிக்கலாம்.”
பாடி பில்டர் துறையில் உங்கள் ரோல் மாடல் யார்?
“எனது ரோல் மாடல் எனது பயிற்சியாளர் குமரவேல்தான்.”
தமிழக அரசுக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன?
“எனக்கு சொந்தமாக வீடு இல்லை. குடிசை வீட்டில்தான் வசிக்கிறேன். எனது வருமானத்தில் பாதி வீட்டு வாடகைக்கே சென்றுவிடுகிறது. பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்கள். பிள்ளைகளை மேற்கொண்டு படிக்க என்னிடம் பணம் வசதி இல்லை. நான் அரசிடம் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். என்னைப் போன்ற பெண்கள் இம்மாதிரியான துறைகளில் சாதிக்கும்போது பொருளாதார ரீதியாக தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். இதற்கு மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையும், மன தைரியமும் எனக்கு உள்ளது.”
ஒற்றைப் பெற்றோராக வாழும் பெண்கள் தங்களது கனவுகளை புதைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மகிழ்ச்சியை தேடுங்கள். அதனை நோக்கி ஓடுங்கள் என்பதற்கு முன்னுதாரணமாகவுள்ள சங்கீதா இன்னும் பல வெற்றிகளை பெறுவார்.