தலைவலிகளும் காரணங்களும் – அலட்சியமின்றி அறியவேண்டிய அடிப்படைத் தகவல்கள் | Headache is not a negligible disease: immediate medical advice is essential
தலைவலிகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் எப்படி அறிவது, அதை எப்படித் தடுப்பது, அதற்கான சிகிச்சை என்ன என்று பார்ப்போம். பொதுவாகத் தலைவலியை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1.தலைவலியே நோயாக வருவது – இதற்குக் காரணம் கிடையாது அல்லது தெரியாது (Primary Headache). இதில் மைக்ரேன், டென்ஷன் தலைவலி, கிளஸ்டர் தலைவலி, காரணம் தெரியாத மற்றத் தலைவலிகளும் அடங்கும். 2.மற்ற நோய்களின் வெளிப்பாடாகத் தலைவலி இருப்பது – (Secondary Headache) (அல்லது) காரணத் தலைவலிகள்.
சில காரணங்கள்:
1. தலை / கழுத்தில் காயம் ஏற்படுதல் (Trauma).
2. தலை / கழுத்து ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பு.
3. ரத்தக் குழாய்கள் தவிர, தலைக்குள் ஏற்படும் மற்றப் பாதிப்புகள் (அ) நோய்கள்.
4. போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் (அ) திடீரென்று நிறுத்திவிடுதல்.
5. நோய்த் தொற்றுகளால் (INFECTION) வரும் தலைவலி.
6. ரத்த ஓட்டப் பாதிப்புகளால் வரும் தலைவலி.
7. கபாலம், கழுத்து, கண்கள், காது, மூக்கு, சைனஸ், பல், வாய் போன்றவற்றால் ஏற்படும் தலை, முக வலிகள்.
8. மனநோயால் ஏற்படும் தலைவலிகள்.
9. ரத்தக் கொதிப்பு.
தலைவலியை வகைப்படுத்துவதுதான் சரியான சிகிச்சை அளிப்பதற்கான முதல்படி. இதில் தலைவலிக்கான காரணங்களை அறிவது மிகவும் முக்கியமான ஒன்று! அந்தக் காரணங்களைச் சரியாக அறிவதற்கு உதவ SSNOOPP என்னும் வார்த்தையைப் பயன்படுத்தலாம்.
# Systemic symptoms – பொதுவான அறிகுறிகள்– காய்ச்சல், எடை குறைதல், ரத்தக் கொதிப்பு போன்றவை.
# Secondary risk factors – வேறு பொதுவான நோய்கள் – எச்.ஐ.வி., புற்று நோய், ஆட்டோ இம்யூன் எனப்படும் ஒரு வகை ஒவ்வாமை நோய்.
# Neurologica# symptoms or Abnorma# signs – நரம்பியல் சார்ந்த குறைபாடுகள் – குழப்பமான மனநிலை, நினைவிழத்தல், வாதம், இரட்டைப் பார்வை போன்றவை.
# Onset – சில நொடிகளில் திடீரென்று வருதல்.
# Older age of onset – 50 வயதுக்கு மேல் முதல்முறையாக வரும் தலைவலி
# Pattern Change – வகை மாற்றம் – முதல் முறை அல்லது மாறுபட்ட தலைவலி
# Previous Headache history – முன் வரலாறு – வலியின் வீச்சு, எத்தனை முறை வருகிறது, தலைவலியின் குணங்கள்…
(Reference: Dodick – 2003)
மருத்துவப் பரிசோதனைகள்
மருத்துவப் பரிசோதனைகள் மூலம் – பொதுவான ரத்தப் பரிசோதனைகள், மூளை மின் வரைபடம் (EEG), சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன், மூளையின் ரத்த ஓட்டம் சார்ந்த டாப்ளர் ஸ்கேன், முதுகில் ஊசி மூலம் நீர் (CSF) எடுத்துப் பரிசோதனை, இதயம், நுரையீரல் சார்ந்த பரிசோதனைகள், கல்லீரல், நோய்த் தொற்று சார்ந்த பரிசோதனைகள் – ஆகியவற்றின் மூலம் தீர ஆராய்ந்து தலைவலிக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது, சரியான சிகிச்சையை முறையைத் தேர்ந்தெடுக்க உதவும்.
சரியான தகவல்கள்
சரியான தகவல்கள் மூலம் – சமிக்ஞைகள், ஒரு பக்கத் தலைவலி, குமட்டல், வாந்தி, மூக்கடைப்பு, கண்ணில் நீர்வருதல், வியர்ப்பது, குடும்பத்தில் மைக்ரேன் வரலாறு இருப்பது போன்றவை மூலம் மைக்ரேன் தலைவலி கண்டுபிடிக்கப்படுகிறது. அதிகத் தூக்கம்/ தூக்கமின்மை, அதிகக் காபி, மது, சில கொழுப்பு உணவு வகைகள், நீண்ட நேரம் கணினியைப் பார்த்துக்கொண்டிருப்பது, பளிச்சிடும் மின்விளக்குகள் போன்ற காரணங்கள் மைக்ரேனைத் தூண்டிவிட வாய்ப்புகள் அதிகம் என்பதால், தூண்டுதல் காரணங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்.
மதிய வேளைக்குப் பிறகு தலைவலி, நெற்றியைச் சுற்றி இறுக்கமாக ரிப்பன் கட்டியதைப் போன்ற வலி, ஓய்வெடுத்தால் வலி குறைதல், வீடு, அலுவலக டென்ஷன்கள் போன்றவை டென்ஷன் தலைவலியைச் சுட்டிக் காட்டுகின்றன.
தலைவலி என்பது அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல. உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம். மைக்ரேன் வராமல் தடுக்கக்கூடிய மருந்துகளை, மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கைமுறை மாற்றங்கள் (Lifestyle Changes), சரியான அளவு ஓய்வு, சரியான நேரத்தில் சரிவிகித உணவு, தினமும் உடற்பயிற்சி, யோகாசனம், மூச்சுப் பயிற்சி, புகையிலை, மதுவைத் தவிர்த்தல் போன்றவை மைக்ரேன், டென்ஷன் தலைவலி போன்றவற்றிலிருந்து ஓரளவுக்கு விடுதலை பெற உதவும்.
மனஇறுக்கம், எப்போதும் படபடப்பு, குடும்பச் சூழ்நிலைகள், வாழ்க்கையில் நிம்மதியின்மை போன்ற பல காரணங்கள் தலைவலியை அதிகரித்து விரக்தி அடையச் செய்யும்.
– டாக்டர் பாஸ்கரன்
‘நலம் வாழ’ பகுதியிலிருந்து.