பஸ்கள் வரலாம்… ஆனா, பயணிகள் வராதீங்க – புதுக்கோட்டை நகராட்சியின் பகீர் பேனரால் குழம்பும் மக்கள் | Pudukottai Municipalitys banner confuses people
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கட்டிடங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதாலும், இடிக்கும் பணி நடைபெற்று வருவதாலும் பயணிகள் யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என நகராட்சி சார்பில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதேசமயம் பேருந்துகள் இன்னும் அங்கிருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், உள்ளே செல்லாமல் பேருந்தில் ஏறி பயணம் செய்வது எப்படி என பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுக்கோட்டையில் சுமார் 5 ஏக்கரில் 42 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 52 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 3 இடங்களில் பயணிகள் காத்திருப்பு பகுதி, 2 கட்டணக் கழிப்பறைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடம், புறக்காவல் நிலையம் மற்றும் 60 கடைகள் உள்ளன. தவிர, முறையான அனுமதியின்றி ஏராளமான கடைகளும் உள்ளன.
இந்நிலையில், இப்பேருந்து நிலையக் கட்டிடம் பலவீனமானதால் கட்டிடத்தின் மேற்கூரை அவ்வப்போது இடிந்து விழுவதும், அதை நகராட்சி நிர்வாகம் தற்காலிக சீரமைப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறு சிமென்ட் பூச்சுகள் இடிந்து விழுந்து பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் இப்பேருந்து நிலையத்தில் அறந்தாங்கி பேருந்துகள் நிறுத்தக் கூடிய பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய், மகன் காயம் அடைந்தனர். இதையடுத்து, இடிந்த பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த மேற்கூரையை அவசர அவசரமாக இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிக்குள் யாரும் வராமல் இருக்கும் வகையில் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பேருந்து நிலையத்துக்குள் யாரும் செல்ல வேண்டாம் என பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘பேருந்து நிலைய கட்டிடம் சேதமடைந்துள்ளதாலும், அபாயகரமாக உள்ளதாலும், மேற்படி கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பயணிகள் யாரும் பேருந்து நிலையத்துக்குள் செல்ல வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதேசமயம் பேருந்து நிலையத்தில் இருந்தே தொடர்ந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஆபத்தான நிலையில் உள்ள பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகளை மட்டும் அனுமதித்துவிட்டு, பயணிகள் யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என கூறுவது வியப்பாக உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து பயணிகள் கூறியது: ஆபத்தான நிலையில் கட்டிடங்கள் இருப்பதாக கூறிவிட்டு, பேருந்து நிலையத்தை பயன்பாட்டில் வைத்துக்கொண்டே பொதுமக்களை பயன்படுத்தக்கூடாது என்றால் அவர்கள் எங்கே செல்வார்கள்?. எனவே, மக்களின் உயிருடன் விளையாடாமல் பேருந்து நிலையத்தை காலி செய்துவிட்டு, தற்காலிக பேருந்து நிலையத்தை உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றனர்.
இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, “தற்காலிக பேருந்து நிலையம் தயாராகி வருகிறது. அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்ட பிறகு தற்காலிக பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கும். பேருந்து நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.18.9 கோடி அரசு அனுமதி அளித்துள்ளதால் அந்தப் பணியும் விரைவில் தொடங்கும்’’ என்றனர்.