புதுக்கோட்டையில் குடிநீர் விநியோகத்தில் குளறுபடி; 3 தினங்களுக்குள் சீரமைக்க எம்எல்ஏ அறிவுறுத்தல் | Drinking water issue in pudukottai
புதுக்கோட்டையில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகத்தில் நிலவி வரும் குளறுபடியை 3 தினங்களுக்குள் சீரமைக்க வேண்டும் என, எம்எல்ஏ வை.முத்துராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆனால், குடிநீர் வரியை நகராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் வசூலிப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக குடிநீர் பிரச்சினை இருந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் குறித்த கூட்டம் இன்று (மே 14) நடைபெற்றது.
கூட்டத்துக்கு புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா தலைமை வகித்தார். குடிநீர் வடிகால் வாரியச் செயற்பொறியாளர் வசந்தி, நகராட்சிப் பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் புதுக்கோட்டைக்கு தினமும் 10 எம்எல்டி குடிநீர் கொடுக்கப்படுகிறது. இதை, நகராட்சி நிர்வாகம் பகிர்ந்தளித்து வருகிறது.
ஆனால், வாரத்துக்கு ஒரு முறையே குடிநீர் வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். 10 எம்எல்டி குடிநீரும் எந்தெந்தப் பகுதிக்குச் செல்கிறது என்கிற விவரத்தை நகராட்சி நிர்வாகம் தெரிவிக்க மறுக்கிறது.
மேலும், குவாரி, தொழிற்சாலை, விளை நிலம், பெரு நிறுவனங்களுக்குச் சட்ட விரோதமாகக் குடிநீர் கொண்டு செல்லப்படுவதாகக் கூட்டத்தில் கலந்துகொண்டோர் சரமாரி புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அனைத்துப் பிரச்சினைகளையும் ஓரிரு தினங்களுக்குள் சரிசெய்து தருவதாக நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, “மூன்று தினங்களுக்குள் காவிரி குடிநீரை முறைப்படுத்த வேண்டும். யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக குடிநீர் எடுப்பதைத் தடுக்க வேண்டும். அனைத்துக் குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்ததோடு, அதற்கான விவரங்களைத் தொட்டிகளில் எழுத வேண்டும்” என, எம்எல்ஏ முத்துராஜா தெரிவித்தார்.