செய்திகள்நம்மஊர்

புதுக்கோட்டை அரசு மருத்துக் கல்லூரி டூ பசுஞ்சோலை: 3,500 மரக்கன்றுகளுடன் தொடரும் பயணம் | Pudukkottai Government Medical College to Greenery: Continuing journey with 3,500 saplings

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தை பசுஞ்சோலையாக மாற்றும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் முழு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இதையறிந்து, பணியில் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஒருவர் இன்று 50 மரக்கன்றுகளை நட்டு, பயணத்தில் இணைந்தார்.

புதுக்கோட்டையில் அடர்ந்த மரங்களுடன் இருந்த கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 125 ஏக்கரைக் கையகப்படுத்தி 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது வளாகத்தில் இருந்த வயதான, பட்டுப்போன நிலையில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன.

இதையடுத்து, தற்போது கல்லூரியில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக சுமார் 3,500 மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடுகிறார் அக்கல்லூரியில் பணியில் சேர்ந்த இணைப் பேராசிரியர் கி.உஷா.

குறிப்பிட்ட ஆண்டுகளில் வளாகமே பசுஞ்சோலையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதியின் முன்னெடுப்பை அறிந்து, தனது பங்களிப்பாக இக்கல்லூரியில் பணி மாறுதல் மூலம் இன்று இணைப் பேராசிரியராகப் பொறுப்பேற்ற கி.உஷா, நீண்ட ஆயுட்காலம் கொண்ட தலா 25 ஆலமரம் மற்றும் அரச மரக் கன்றுகளை நட்டார்.

இந்த மரக்கன்றுகளானது மருத்துவப் பணியாளர்களின் குடியிருப்பு அருகே உள்ள குளத்தின் கரையோரம் நடப்பட்டன. மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் வீ.சி.சுபாஷ்காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *