
புதுக்கோட்டை தனியார் நிதி நிறுவனத்தில் 305 பவுன் நகைகளை அலுவலர்களே திருடியது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை தெற்கு 4-ம் வீதியில் தனியார் நிதி நிறுவனம் (எச்டிபி) உள்ளது. இங்கு, வாடிக்கையாளர்களுக்கு நகைக் கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பலவிதமான கடன்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், நிதி நிறுவனத்தில் கடைசி ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து அண்மையில் தணிக்கை செய்யப்பட்டது. இப்பணியை நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் வி.ராஜேஸ் தலைமையிலான குழு செய்தது.

அதில், கடந்த ஓராண்டில் ரூ.91 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 305 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது. நகைகளைத் திருடியதாக அந்நிறுவனத்தில் கிளை மேலாளராகப் பணிபுரிந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.உமாசங்கர் (42), அலுவலர்களான பொன்னமராவதி அருகே செம்பூதியைச் சேர்ந்த பி.முத்துக்குமார் (28), மணிப்பள்ளத்தைச் சேர்ந்த ஆர்.சோலைமணி (37) ஆகியோர் மீது கணேஷ் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டையில் கடந்த சில ஆண்டுகளாகக் குறிப்பிட்ட சில வங்கிக் கிளை, நிதி நிறுவனங்களில் பணிபுரிவோரே வாடிக்கையாளர்களின் நகைகளைக் கையாடல் செய்து வருவது வாடிக்கையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.





























