புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு தொடக்கம் | Excavation begins at Porpanaikottai in Pudukottai district
புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் தமிழக தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுப் பணி நேற்று தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழக தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுப் பணியை மாநில நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது: தமிழர்களின் பாரம்பரியத்தை உலக அளவில் நிலைநிறுத்தக்கூடிய அளவுக்கு தொல்லியல் துறை சார்பில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகலை, வெம்பக்கோட்டை, மயிலாடும்பாறை, கங்கைகொண்டசோழபுரம் போன்ற இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், சங்க காலத்தில் இருந்து வாழ்விட பகுதியாகவும், கோட்டை, கொத்தளங்களோடும் இருக்கக்கூடிய பொற்பனைக்கோட்டையில் மேற்கொள்ளப்படும் ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும், இந்தப் பகுதி சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதாக இருக்கும் என்றும் தெரிகிறது. அகழாய்வு செய்யப்படும் இடங்களில் கிடைக்கும் தொல்பொருட்களின் அடிப்படையில், அங்கு புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
சிவகலை உட்பட பல்வேறு இடங்களில் கிடைத்துள்ள ஆய்வு தரவுகள் மூலம் தமிழ் மொழியின் தொன்மை என்பது வேறு எந்த இந்திய மொழிகளைக் காட்டிலும் மிக மிக தொன்மையானது என தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னதுரை, தொல்லியல் துறை இயக்குநர் சே.ரா.காந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தொல்லியல் துறை இணை இயக்குநர்ரா.சிவானந்தம், பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குநர் த.தங்கதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக புதுக்கோட்டையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவது என்ற முடிவை ரிசர்வ் வங்கி எடுப்பதற்கு முன்பாக மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். வரும் காலங்களிலாவது இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.