பெண் எஸ்பியிடம் பாலியல் அத்துமீறல் விவகாரம் – முன்னாள் சிறப்பு டிஜிபியிடம் விசாகா கமிட்டி விசாரணை | visaka committee
பெண் எஸ்பியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் சிறப்பு டிஜிபியிடம் விசாகா கமிட்டியினர் நேற்று விசாரணை நடத்தினர்.
தமிழக முதல்வர் பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றார். முதல்வரின் பாதுகாப்புக்காக சென்றிருந்த தமிழக காவல் துறையின் சிறப்பு டிஜிபி பதவியில் இருந்த அதிகாரி ஒருவர், அங்கு பணியில் இருந்த இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண் அதிகாரி, தமிழக காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரிடம் புகார் அளித்தார். பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய விசாகா கமிட்டியை அமைத்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த குழு, தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெய ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்டது. இதில் தமிழக காவல் துறையின் தலைமையிட கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், நிர்வாகப் பிரிவு ஐஜி ஏ.அருண், காஞ்சிபுரம் டிஐஜி பி.சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அலுவலர் வி.கே.ரமேஷ்பாபு, சர்வதேச நீதி அமைப்பின் நிர்வாகி லோரெட்டா ஜோனா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஐ.ஜி. அருண் நீண்ட விடுப்பில் சென்றதால், விசாகா கமிட்டியில் அவருக்கு பதிலாக ஐஜி நிர்மல் குமார் ஜோஷி கடந்த 5-ம் தேதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் சிறப்பு டிஜிபியிடம் விசாகா கமிட்டியினர் நேற்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை, தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெய ரகுநந்தன் தலைமையில் நடைபெற்றது. பல மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில், அந்த விவகாரம் தொடர்பான முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.