மஞ்சுவிரட்டுப் போட்டி | சிவகங்கை, புதுக்கோட்டையில் காளை முட்டியதில் பார்வையாளர்கள் 2 பேர் பலி | Manjuvrathut competition |Two spectators killed in Sivagangai, Pudukottai bull run
சென்னை: சிவகங்கை மாவட்டம் சிராவயல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயபுரம் கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டுப் போட்டிகளில், காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் இருவர் பலியாகினர்.
சிராவயல்: பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் போலவே சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் சிராவயல் மஞ்சுவிரட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மஞ்சுவிரட்டுப் போட்டிகளில் பங்கேற்க 300 காளைகள் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 250 காளைகள் மற்றும் 105 வீரர்களுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மஞ்சுவிரட்டுத் திடலில் 250 காளைகள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், 500-க்கும் மேற்பட்ட காளைகளை வெளியே அவிழ்க்கப்பட்டு வருகின்றன. இந்த மஞ்சுவிரட்டுப் போட்டிகளைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வேடிக்கைப் பார்த்து வந்தனர். இந்நிலையில், மஞ்சுவிரட்டுப் போட்டியைக் காண வந்திருந்த மதுரை மாவட்டம் சுக்காம்பட்டியைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரை காளை முட்டியது.இதில் பூமிநாதனின் மார்பு, மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக காரைக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பூமிநாதன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை: இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கே.புதுப்பட்டி அருகில் உள்ள கே.ராயபுரத்தின் கோயில் திருவிழாவை முன்னிட்டு காலை மஞ்சுவிரட்டுப் போட்டி தொடங்கியது. இந்தப்போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.இந்த மஞ்சுவிரட்டில், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
இந்நிலையில், மஞ்சுவிரட்டுப் போட்டியைக் காண வந்த சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் மீது காளை முட்டியதில் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த கணேசனை அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், கணேசன் சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வாடிவாசல் வழியாக மட்டுமே பதிவு செய்யப்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்படும். ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். மஞ்சுவிரட்டுப் போட்டிகளில், ஆங்காங்கே காளைகள் அவிழ்க்கப்படும். பெரும்பாலும், பார்வையாளர்கள் தாங்கள் வரும் வாகனங்கள் அல்லது உயரமான இடங்களில் அமர்ந்து பார்வையிடுவர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளோடு ஒப்பிடுகையில் இதில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி பார்வையாளர்கள் கூடுதல் கவனத்தில் இருக்க வேண்டும்.