செய்திகள்நம்மஊர்

மனைவியைக் கொலை செய்த கணவருக்குத் தூக்கு தண்டனை; புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு | Execution of husband who killed wife; Pudukkottai Magistrate Court verdict

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து இன்று (மே 6) தீர்ப்பு அளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே தேனிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (52). இவருக்கு 3 மனைவிகளுடன் மகன், மகள்கள் மொத்தம் 11 பேர் உள்ளனர். கடந்த 2019-ல் தனது 3-வது மனைவியின் மகளான 17 வயது சிறுமியை முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத் தனது தாயார் பானுமதியிடம் (50) சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து, கணவரை பானுமதி கண்டித்துள்ளார். அன்றைய தினம் மாலையில் மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டிச் சென்ற பானுமதியை தென்னதிரையன்பட்டி யூக்கலிப்டஸ் காட்டில் முருகேசன் கொலை செய்து சடலத்தை வீசிச் சென்றார். இதுகுறித்து புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் முருகேசன் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதி ஆர்.சத்யா இன்று தீர்ப்பளித்தார். அதில், மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதமும், திருத்தப்பட்ட போக்ஸோ சட்டம் 2019-ன் கீழ் ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் மற்றொரு பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் தமிழக அரசு நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கில், அரசு வழக்கறிஞராக அங்கவி ஆஜரானார். இவ்வழக்கை நேர்த்தியாகப் புலன் விசாரணை செய்து, குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கடுமையான தண்டனை கிடைக்கச் செய்த போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.

கடந்த 6 மாதங்களில் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *