செய்திகள்நம்மஊர்

மும்முனை மின்சாரம்; 24 மணி நேரமும் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு | Three-phase power; will be provided to all farmers from April 1 for 24 hours: CM Palanisamy

ஏப்.1-ம் தேதியிலிருந்து மும்முனை மின்சாரம், 24 மணி நேரமும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 26), சேலம் மாவட்டம், மேட்டூர், திப்பம்பட்டியில் நடைபெற்ற மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

“சேலம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் வெள்ள உபரி நீரை வறண்ட பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்களில் நிரப்பி நிலத்தடி நீரை உயர்த்துவதற்கான இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, இந்த வறட்சியான பகுதியில், துரிதமாக, மிகச் சிறப்பாகப் பணிகள் நடைபெற்று, குறுகிய காலத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 15.7.2019 அன்று சட்டப்பேரவையிலே பொதுப்பணித்துறையின் மானியக் கோரிக்கையில் இந்தத் திட்டத்தை நான் அறிவித்தேன். இரண்டு ஆண்டுகள்கூட ஆகவில்லை. இதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட தொகை ரூபாய் 565 கோடி. மேலும், இதற்கான நிலத்தைக் கையகப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு வேகமாக இந்தப் பணிகளைத் தொடங்கினோம்.

மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரி நீரை திப்பம்பட்டியிலுள்ள பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து எம்.காளிப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் நீரேற்று செய்து, அதன் மூலம் வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூலம் 42 ஏரிகளுக்கும், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து நங்கவள்ளி வழியாக 31 ஏரிகளுக்கு நீர் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில், மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டங்களைச் சேர்ந்த 8 ஒன்றியங்களிலுள்ள 40 கிராமங்களில் உள்ள 79 ஏரிகள் மூலம் 4,238 ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும், ஏறத்தாழ 38 கிராமங்களுக்கான குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் ஏரிகளுக்குத் தேவைப்படும் மொத்த நீர் 1/2 டிஎம்சி. வெள்ள உபரி நீர் திப்பம்பட்டியில் உள்ள பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து 30 நாட்களுக்கு தினந்தோறும் விநாடிக்கு 214 கன அடி வீதம் நீரேற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் 6.5.2020 அன்று தொடங்கப்பட்டு, முழுவீச்சில் செயல்பட்டு, விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீர் வழங்கும் பணி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

அதே போல, இன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2 புதிய திட்டப் பணிகளுக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக 21 புதிய திட்டப் பணிகளுக்கும் என மொத்தம் 5.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு என்னால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறையின் மூலம் முடிவுற்ற 2 பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் இருப்பாளை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 450 ஊரக குடியிருப்புகளில் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் வசதிகள். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் எடப்பாடி நகராட்சியில் முடிவுற்ற 2 பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பேரூராட்சி துறை சார்பில் முடிவுற்ற 3 பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாவட்ட ஊராட்சி மையம் சார்பில் முடிவுற்ற 23 பணிகள், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் சார்பில் முடிவுற்ற 2 பணிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் சார்பில் முடிவுற்ற 4 பணிகள், கூட்டுறவுத் துறையின் சார்பில் தோரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் என மொத்தம் ரூபாய் 62 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் 36 முடிவுற்ற பணிகள் என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. 50 ஆண்டு காலமாக நிறைவேற்ற முடியாமல், விவசாயிகள் ஏங்கியிருந்த திட்டத்தை நிறைவேற்றி, டெல்டா மாவட்ட விவசாயிகளின் துயர் துடைக்க ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தினார். தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி காவிரி நதிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. நான் முதல்வராகப் பொறுப்பேற்று இந்தக் காவிரி நதிநீர் தீர்ப்பைப் பெற்றுத் தந்தது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து எங்கள் அரசு சாதனை புரிந்துள்ளது. வறட்சி, புயல், வெள்ளத்தால் பாதிகப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.12 ஆயிரத்து 110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை, எண்ணங்களை நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு. ஐந்தாண்டு காலத்தில் இரண்டு முறை பயிர்க்கடனை ரத்து செய்து வரலாற்றைப் படைத்த அரசு அதிமுக அரசு.

ஜெயலலிதா 2016 தேர்தல் அறிக்கையில், நான் முதல்வராகத் தேர்தெடுக்கப்பட்டவுடன் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்ததை, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ரத்து செய்தார். தேர்தல் நேரத்தில் வருகின்ற கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் கட்சியினர் குறிப்பிடுவர். ஆனால், அதிமுக அரசு, விவசாயிகள் கோரிக்கை வைத்தவுடன் தேர்தலுக்கு முன்பாகவே அதனை நிறைவேற்றி வரலாற்றைப் படைத்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கையான மும்முனை மின்சாரம், ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 24 மணி நேரமும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.

இன்னும் பல்வேறு திட்டங்கள் எங்கள் அரசால் நிறைவேற்றப்படுகின்றன. வறட்சி வந்தபோது ஏறத்தாழ 2,247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசாங்கம். இதுவரை தமிழக வரலாற்றில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய சரித்திரம் கிடையாது. அந்தச் சரித்திரத்தையும் அதிமுக அரசுதான் செய்துள்ளது. 10 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் என பல திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே பயிர்க் காப்பீடு திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 9,257 கோடி ரூபாய் என அதிக இழப்பீட்டைப் பெற்றுத் தந்த அரசாங்கம் தமிழ்நாடு அரசாங்கம்தான். விவசாயிகள் ஏற்றம் பெறுகிற சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறோம்.

அதேபோல், கடைமடைப் பகுதிகளிலும் தூர்வாரி மேட்டூரிலிருந்து தண்ணீர் கடைமடை வரை சரியாகச் சென்று சேர்ந்த காரணத்தால் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதுடன், விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்கள், விதைகள், உரங்கள் அனைத்தும் குறித்த காலத்தில் அரசாங்கம் வழங்கிய காரணத்தாலும் கடந்த ஆண்டு 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளோம். இதுவரை இவ்வளவு நெல் உற்பத்தி செய்தது கிடையாது. இதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும், 27 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் நெல் உற்பத்தி செய்தது கிடையாது.

குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றித்தின் சார்பாக ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகளை விவசாயிகள் பங்களிப்போடு தூர்வாரி இத்திட்டத்தை அற்புதமாக நிறைவேற்றிய ஒரே அரசாங்கம் அதிமுக அரசாங்கம். இதனால், தமிழ்நாடு முழுவதும் பருவ காலங்களில் பொழிந்த மழை நீர் அனைத்து ஏரிகள், குளங்களில் சேமித்து வைக்கப்பட்டு, விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தேவையான நீர் தங்கு தடையில்லாமல் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கிறோம்.

நீர் மேலாண்மையில் தமிழ்நாடு சிறந்த மாநிலமென்று 2019-2020 இல் தேசிய விருதைப் பெற்றுள்ளது. புயல், தொடர் மழை, வறட்சி காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எங்கள் அரசு உதவி செய்துள்ளது. காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப் பெரிய திட்டத்தை விவசாயிகளுக்காக அளித்துள்ளோம். இதுவரை இவ்வளவு பெரிய திட்டம் அறிவிக்கப்பட்டது கிடையாது. இந்தத் திட்டத்தை புதுக்கோட்டையில் நானே நேரடியாகத் தொடங்கி வைத்தேன்.

ரூபாய் 2,639 கோடி மதிப்பீட்டில் கல்லணை கால்வாய் திட்டம், பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட 3,384 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காவிரி உப வடிநிலத் திட்டம், நேற்றைய தினம் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட 933 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கீழ் பவானி வடிநிலத் திட்டம், 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டளை உயர்மட்ட கால்வாய் பாசனத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

தமிழ்நாட்டிலுள்ள காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுத்துவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க, ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை நிறைவேற்ற திட்ட அறிக்கை 10 ஆயிரத்து 711 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். இதனால், குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் சுத்தமான நீர் கிடைக்கும். இந்தத் திட்டத்தையும் எங்கள் அரசு நிறைவேற்றி விவசாயிகள் மற்றும் இரவு, பகல் பாராமல் உழைக்கும் வேளாண் தொழிலாளிகளையும் காக்கக்கூடிய அரசு எங்கள் அரசு. நிலம், வீடு இல்லாமல் இருக்கும் வேளாண் தொழிலாளிகள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் எங்கள் அரசால் கட்டிக் கொடுக்கப்படும்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *