மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே!கவிஞர் இரா.இரவி
உலகின் முத ன்மொழி நம்மொழி தமிழ்
உலகின் முதல்மனிதன் உச்சரித்தது தமிழ்
கீழடி உரக்கச் சொல்லும் உண்மை தமிழ்
கீறிய எழுத்துக்கள் உணர்த்தும் உண்மை தமிழ்
அமெரிக்காவின் ஆய்வாளர்கள் முடிவு தமிழ்
அனைத்துலக ஆய்வின் அறிக்கை தமிழ்
ஆறாயிரம் ஆண்டுகள் முந்தைய தமிழ்
இருபத்திஓராம் நூற்றாண்டிலும் நிலைத்திட்ட தமிழ்
இலக்கண இலக்கியங்களின் சுரங்கம் தமிழ்
இனிய மொழி என்றும் இனிக்கும் தமிழ்
பாட்டரசன் பாரதி போற்றிப் பாடிய தமிழ்
பாவேந்தர் புரட்சிக்கவிஞர் உயர்த்திப்பாடிய தமிழ்
உலகப்பொதுமறையை உலகிற்குத் தந்திட்ட தமிழ்
ஒப்பற்ற சங்க இலக்கியம் ஈந்திட்ட தமிழ்
பன்னாட்டு மொழியாக எங்கும் ஒலித்திடும் தமிழ்
பண்டைக்காலம் தொட்டே நிலைத்திட்ட தமிழ்
பக்தி இலக்கியத்திலும் பரவசம் தரும் தமிழ்
பார் போற்றும் புகழ் பெற்றுள்ள தமிழ்
அவ்வையின் அமுத மொழி அறநெறி தந்த தமிழ்
அவையில் பேசினால் கைதட்டல் பெறும் தமிழ்
கற்கண்டு சொற்கொண்டு இனித்திடும் தமிழ்
கண்டோர் கேட்டோர் வியந்திடும் தமிழ்
ஆங்கிலேயரும் பாராட்டிப் புகழ்ந்திட்ட தமிழ்
அந்நியரும் விரும்பிப் படித்திடும் தமிழ்
அனைத்து மொழிகளின் தாய்மொழி தமிழ்
மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே
முன்னோர் போற்றிய முத்தமிழைப் போற்றுவோம்!
நன்றி கவிஞர் இரா.இரவி