புதுக்கோட்டை; மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு எந்த ஒப்புதலும் தரவில்லை என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
திமுக தேர்தல் அறிக்கையை முன்கூட்டியே கூற இயலாது. தேர்தலில் அதுதான் கதாநாயகன். அதை உரிய நேரத்தில் கட்சியின் தலைவர் வெளியிடுவார்.
தமிழக தேர்தல் களம் திமுகவுக்கா? பாஜகவுக்கா? என்பது அல்ல. தமிழகத்தில் பாஜக கால் ஊன்றவில்லை. வளர்ந்ததைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். பண பலத்தை வைத்து தமிழகத்தில் பாஜக பலமாக இருப்பதைப் போல காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தல் முடிந்து வாக்குகளை எண்ணும்போது அவர்களின் உண்மையான பலம் தெரிய வரும். திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு எந்த ஒப்புதலும் தரவில்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும், ஆணையத்திலும் தமிழக நீர்வளத் துறை அலுவலர்கள் உரிய வாதங்களை எடுத்து வைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.






























