ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் கச்சத் தீவுக்கு உரிமை கோர முடியும்: சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கருத்து | minister ragupathi about katchatheevu issue
புதுக்கோட்டை: கச்சத் தீவு ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினருக்கு சொந்தமானது என்பதற்கு ஆதாரம் உள்ளதால், அவர்கள் உரிமை கோர முடியும்என்று மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி, இதுவரை கச்சத் தீவு மீட்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது தேர்தலுக்காக இந்தவிஷயத்தை கையில் எடுத்துள்ளனர்.
கச்சத் தீவை கொடுக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொண்டதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவது தவறு. கச்சத் தீவு தொடர்பான பேச்சுவார்த்தையை இரு ஆண்டுகள் தள்ளிப்போட முடியுமா என்றுதான் அவர் கேட்டாரே தவிர, அவர் சம்மதம் தெரிவித்ததாக எந்த இடத்திலும் ஆதாரம் இல்லை.
கச்சத் தீவின் வருவாய் ஆவணத்தில், அது ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கச்சத் தீவை மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்திருந்தால்கூட, அது தவறுதான். ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் மட்டுமே, உரிமை கொண்டாடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர்கள் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். இதற்கு சட்ட ஆதாரமும் உள்ளது. வெற்றி தோல்வி என்பது வேறு. ஆனால், இது தொடர்பாக வழக்குத் தொடர்வதற்கு முகாந்திரங்கள் உள்ளன. கச்சத் தீவை மீட்பது எங்களது லட்சியம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்கள் சட்ட நிபுணர்களோடு கலந்துபேசி, நிச்சயம் கச்சத் தீவை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.