வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு ரூ.181 கோடி – முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் | Chief Minister M.K.Stalin gave Rs 181 crore as drought relief to farmers
சென்னை: வேளாண் துறை சார்பில் ரூ.62.42 கோடியில் கட்டிடங்களைத் திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வடகிழக்குப் பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி மதிப்பில் வறட்சி நிவாரண நிதியையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண் துறை சார்பில், சென்னை – கிண்டி, வேளாண் தொழில்நுட்ப பசுமை பூங்காவில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்துக்காக ரூ.32.64 கோடியில் நிர்வாக கட்டிடம், திருப்பூர்- தாராபுரத்தில் ரூ.4 கோடியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், திருவண்ணாமலை – தெள்ளானந்தலில் ரூ.3.20 கோடியில் சமையல் எண்ணெய்களுக்கான இயந்திரங்களுடன் கூடிய நவீன சிப்பம் கட்டும் அமைப்பு, சந்தை ஊக்குவிப்பு மையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
மேலும், விழுப்புரம் – மேல்மலையனூர், வல்லம், செஞ்சி, கடலூர் – குமராட்சி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை, அரியலூர் – அரியலூர் ஆகிய இடங்களில் ரூ.22.58கோடியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் என ரூ.62.42 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வேளாண் கருவிகள்: வேளாண் பட்ஜெட்டில், ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில், ஒரு கிராமத்துக்கு இரண்டு பவர்டில்லர் இயந்திரங்கள் என்ற அடிப்படையில் வரும் நிதியாண்டில், 2,504 கிராமங்களுக்கு ரூ.43 கோடி மானியத்தில் பவர்டில்லர்கள் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல்கட்டமாக ரூ.35 கோடி மானியத்தில் 3,907 விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் 293 விவசாயிகளுக்கு விசைகளையெடுப்பான் கருவிகள் என மொத்தம் 4200 விவசாயிகளுக்கு இக்கருவிகள் வழங்கப்படுகிறது. இதைத் தொடங்கி வைக்கும் விதமாக, 2 விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் மற்றும் ஒரு விவசாயிக்கு விசை களையெடுப்பான் கருவி வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
வறட்சி நிவாரணம்: கடந்த 2022-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறைவாக மழை பெய்ததால் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மற்றும்தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான வறட்சி ஏற்பட்டது. இதன்காரணமாக 3,52,797 ஏக்கரில் பயிரிடப்பட்ட வேளாண் பயிர்கள் 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல்பாதிக்கப்பட்ட பரப்பை உறுதி செய்தனர். அதன்படி, மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துரையை பரிசீலித்து, 1,87,275 விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,34,305 விவசாயிகளுக்கு ரூ.132.71 கோடி, சிவகங்கையில் 25,847 பேருக்கு ரூ.25.77 கோடி, தென்காசியில் 17,096 பேருக்கு ரூ.13.85 கோடி, புதுக்கோட்டையில் 6,746 பேருக்கு ரூ.6.63 கோடி, விருதுநகரில் 3,220 பேருக்கு ரூ.2.40 கோடி, தூத்துக்குடியில் 61 பேருக்கு ரூ.4.43 லட்சம், எனரூ.181.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்க மாவட்டஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வறட்சி நிவாரணம் வழங்கும் பணியை தொடங்கி வைக்கும் விதமாக 3 விவசாயிகளுக்கு நிவாரண நிதிக்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, வேளாண்துறை சிறப்பு செயலர் இரா.நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.