தொழில்நுட்பம்

வளையங்களுடன் யுரேனஸ்… – ஜேம்ஸ் வெப் எடுத்த புகைப்படம் | NASA’s Webb Scores Another Ringed World With New Image of Uranus

வாஷிங்டன்: யுரேனஸ் கோளின் புகைப்படத்தை அதன் வளையங்களுடன் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி SMACS 0723 விண்மீன் திரள், தெற்கு வளைய நெபுலா, ஸ்டிபன்ஸ் குவின்டெட், கரினா நெபுலா, வியாழன் ஆகியவற்றின் தெளிவான படங்களை எடுத்து நாசாவுக்கு அனுப்பியது. இந்த நிலையில், யுரேனஸ் புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி அனுப்பியுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பதிவு செய்துள்ள புகைப்படத்தில் நீல நிறத்தில் பிரகாசமாக காணப்படும் யுரேனஸை சுற்றி பல வளையங்கள் காணப்படுகின்றன. மேலும் யுரேனஸ் தொலைதூரத்தில் இருக்கும் புகைப்படத்தையும் நாசா வெளியிட்டுள்ளது. அதில் யுரேனஸை சுற்றி அதன் நிலாக்கள் காணப்படுகின்றன.

சூரியனில் இருந்து ஏழாவது கிரகமாக உள்ள யுரேனஸ் தனித்துவமானது. இது அதன் சுற்றுப்பாதையிலிருந்து தோராயமாக 90 டிகிரி கோணத்தில் சுழல்கிறது. இந்த கிரகத்தின் துருவ பகுதியில் பல ஆண்டுகள் நிலையான சூரிய ஒளி நிலவுவதால் இது தீவிர பருவங்களை கொண்டிருக்கிறது. அதேபோல் சூரிய ஒளி விழாத ஆண்டுகளில் கிரகத்தில் இருள் சூழ்ந்து காணப்படும், யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றிவர 84 வருடங்கள் ஆகின்றது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி: நாசாவின் மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம் வெப் விண்வெளி தொலைநோக்கி கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது. பால்வீதியில், பூமியைப் போன்று உயிர் இருந்த/இருப்பதற்குச் சாத்தியமான புறக்கோள்கள் (exoplanets) இருக்கின்றனவா, பெருவெடிப்பிலிருந்து முதல் விண்மீன் கூட்டங்கள் எப்படி உருவாகின போன்ற பல கேள்விகளுக்கு இத்தொலைநோக்கி பதில் சொல்லும் என்று நாசா தெரிவித்தது.

பூமியின் வெப்பத்தின் காரணமாக வரும் அகச்சிவப்புக் கதிர்கள் தொலைநோக்கிக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஜேம்ஸ் வெப் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி விண்வெளியில் பதிவு செய்த முதல் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார். 1960-களில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசா முனைப்புடன் இருந்தபோது, அதன் நிர்வாகியாக இருந்த ஜேம்ஸ் வெப்பின் பெயர்தான் இத்தொலைநோக்கிக்கு சூட்டப்பட்டுள்ளது. சுமார் ரூ. 75,000 கோடி செலவில் இந்த தொலை நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *