புதுக்கோட்டை: விமர்சனத்தை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் பாஜகவினர் என மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வெளிநாடுகளில் மத்திய பாஜக அரசைப் பற்றி விமர்சிக்கிறாரே தவிர, தரக்குறைவாக பேசவில்லை. விமர்சனம் செய்வதைக்கூட பாஜகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அயல்நாடுகளுக்கு செல்லும்போது பேசாமல் மவுனமாகவா இருக்க முடியும்?
பிரதமரை விமர்சிப்பவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழகத்தில் பாஜக தலைவர் ஒருவர் கூறியுள்ளார். விமர்சனம் செய்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமா? விமர்சனத்தையே சகித்துக்கொள்ள முடியாத கட்சியின் ஆட்சியை பார்க்கிறேன் என்றார்.






























