ஆரோக்கியம்வாழ்வியல்

வெங்காயம் மூலம் கருப்பு பூஞ்சை பரவுகிறதா? பீதியை ஏற்படுத்தும் பகீர் தகவல்

வெங்காயத்தின் மேற்பரப்பில் இருக்கும் கருப்பு பகுதி பொதுவாக பூமியில் காணப்படும் பூஞ்சைகள் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வீட்டில் நாம் பயன்படுத்தும் பொடுட்களில் இருந்து கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறது என கூறினால் நம்புவீர்களா? அன்றாடம் உட்கொள்ளும் காய்கறிகள் மற்றும் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் கருப்பு பூஞ்சை இருப்பதை அறிந்தால், பயம் அதிகமாகிறதா?

இதுபோன்ற தகவல் அடங்கிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், இந்த தகவல் மக்களிடையே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

“கருப்பூ பூஞ்சை பற்றி அறிந்து கொள்ளுங்கள். வெங்காயம் வாங்கும் போது, சமயங்களில் அதன் மேல்பரப்பில் கருப்பாக இருப்பதை கவனித்துள்ளீர்களா? உண்மையில் அது தான் கருப்பு பூஞ்சை. குளிர்சாதன பெட்டியினுள் இருக்கும் ரப்பரின் மேல் கருப்பாக இருப்பதும் கருப்பு பூஞ்சை தான். இதனை தவிர்த்தால், குளிர்சாதன பெட்டியினுள் இருக்கும் காய்கறிகள் மூலம் கருப்பு பூஞ்சை நம் உடலினுள் சென்றுவிடும்” என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், குளிர்சாதன பெட்டியினுள் இருக்கும் கருப்பு நிற மோல்டு, வெங்காயத்தின் மேல்பரப்பில் இருக்கும் கருப்பு நிற அடுக்குகள் கருப்பூ பூஞ்சை இல்லை என தெரியவந்தது. கருப்பு பூஞ்சை நோயை உருவாக்கும் பூஞ்சைகள் வேறானது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வெங்காயத்தின் மேல் இருப்பது பொதுவாக பூமியினுள் காணப்படும் பூஞ்சைகள் தான். இந்த பூஞ்சை அஸ்பெர்கிலஸ் நைகர் என அழைக்கப்படுகிறது. இதே தகவலை பல ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *