செய்திகள்நம்மஊர்

வேளாண் சட்டங்களை ரத்து செய்க; புதுக்கோட்டையில் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு | Repeal agricultural laws; Pudukottai legal copy burning protest – MLA participation

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூன் 5) பல்வேறு இடங்களில் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை கலந்துகொண்டார்.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்கள், விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கடந்த 6 மாதங்களாக விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. கந்தர்வக்கோட்டையில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் தலைமை வகித்தார்.

போராட்டத்தை விளக்கி கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை பேசினார். பின்னர், கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

புதுக்கோட்டையில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சி.சோமையா, கீரமங்கலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.மாதவன், அரிமளத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜேசுராஜ் தலைமையில் கோட்டைக்காடு, விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் பொன்னமராவதி, விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி ஏ.ராஜேந்திரன் தலைமையில் அறந்தாங்கியில் நடைபெற்ற போராட்டத்தின்போது நகல்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.

இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில உள்ள 13 ஒன்றியங்களிலும் சுமார் 100 இடங்களில் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.



நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *