வ.உ.சி., மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி சிலைகள் – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | Muvalur Ramamirtham, Muthulakshmi Reddy Statues – inaugurated by Chief Minister Stalin
சென்னை: கோவை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையில் செய்தித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனார், மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி சிலைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: செய்தித் துறை சார்பில் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ.சிதம்பரனார், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ஈஸ்வரன், நாமக்கல்லில் சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் ஆகியோருக்கு ரூ.5.10 கோடியில் புதிதாக அமைக்கப்பட உள்ள உருவ சிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
ரூ.30 கோடியில் கட்டிடங்கள்: இந்து சமய அறநிலையத் துறைசார்பில், ஆணையர் அலுவலக கூடுதல் கட்டிடம் ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒப்பந்த காலத்துக்கு 6 மாதம் முன்னதாக இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது 3 தளங்களுடன், 33,202 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.13.80கோடியில் அனைத்து வசதிகளுடன் பக்தர்கள் வரிசை வளாகமும், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயிலில் ரூ.1.63 கோடியில் திருமண மண்டபமும் கட்டப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் ரகுபதி, மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மெய்யநாதன், தலைமைச் செயலர் இறையன்பு, செய்தித் துறை செயலர் இரா.செல்வராஜ், செய்தித் துறை இயக்குநர் த.மோகன், அறநிலையத் துறைசெயலர் சந்திரமோகன், துறை ஆணையர் முரளிதரன், துறையின் சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.