ஹாட் லீக்ஸ்: நந்தகுமாரை அழைத்துவந்த உதயச்சந்திரன்
பள்ளிக்கல்வித் துறைக்கு ஆணையர் பொறுப்பில் கொண்டு வந்ததும் அதற்கு ஐஏஎஸ் அதிகாரியான நந்தகுமாரை நியமிக்க வைத்ததும் முதல்வரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் தானாம். நந்தகுமார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அந்த மாவட்ட அரசுப் பள்ளிகளில் படித்த திறமையான ப்ளஸ் டூ மாணவர்கள் 30பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு பார்த்திபனூரில் தனி வகுப்பெடுக்க ஏற்பாடு செய்தாராம். அந்த மாணவர்கள் அங்கேயே தங்குவதற்கான இடவசதி, உணவு உள்ளிட்டவற்றை தனது பொறுப்பில் ஏற்படுத்திக் கொடுத்தாராம் நந்தகுகுமார். அப்படி அவரால் படிக்கவைக்கப்பட்டவர்களில் பலர் இப்போது ஸ்டான்லி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரிகளில் 5-ம் ஆண்டு படிக்கிறார்களாம். இன்னும் சிலர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று லட்சியம் தொட்டிருக்கிறார்கள். சரியான வாய்ப்புகள் அமைந்தால் அரசுப் பள்ளி மாணவர்களாலும் சாதிக்கமுடியும் என்பதை சவாலாக எடுத்து நிரூபித்துக் காட்டியிருக்கிறார் நந்தகுமார். மதுரையை அடுத்துள்ள நாகமலை புதுக்கோட்டையில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட உதயச்சந்திரன், நந்தகுமாரால் சாதித்த மாணவர்கள் சிலர் பேசியதிலிருந்து இந்த விஷயத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டாராம். அதனால் தான் வாய்ப்பமைந்ததும் நந்தகுமாரை உரிய இடத்தில் உட்காரவைத்தாராம் உதயச்சந்திரன்.