உலகம்தொழில்நுட்பம்

விமானத்தில் இப்படி ஒரு பாதுகாப்பு வசதியா? கொரோனாவுக்கு சவால் விடும் அதிநவீன தொழில்நுட்பம்

விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் கொரோனாவுக்கு சவால் விடும் திறன் கொண்டது என தகவல் வெளியாகி உள்ளது.

மனித வாழ்வில் பயணம் மேற்கொள்வது ஒவ்வொருத்தருக்கும் மறக்க முடியாத நினைவுகளையும், புதுமையான அனுபவத்தையும் கொடுக்கும். மனித இனம் தோன்றியது முதல் பயணம் செய்யும் முறை மாறி வந்த போதிலும், பயணம் செய்தது போதும் என நினைப்போர் யாரும் இல்லை.
இந்த காலக்கட்டத்தில் பயணம் செய்ய பஸ், ரெயில், கார், மோட்டார்சைக்கிள் என சாலை வழி துவங்கி, விமானம் வரை அனைத்துவித பயணங்களும் அனைவருக்கும் ஏற்ற வகையில் கிடைக்கிறது. இவற்றில் வான்வழி செல்லும் விமான பயணம் மற்ற போக்குவரத்துகளை விட அபாயகரமானது என்ற எண்ணோட்டம் பரவலாக இருந்து வருகிறது. 

பொதுவாக விமானங்களில் சிறு இடத்தினுள் பலர் மிக அருகில் அமர வைக்கப்படுவர். இத்துடன் விமானத்தினுள் காற்றோட்டத்திற்கான வசதி இருக்காது. இதனால் விமான பயணம் செய்யும் ஒருவருக்கு சளி, இருமல் போன்றவை இருந்தாலும், மிக எளிதில் அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் அதிகம் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால் இந்த கூற்றில் துளியும் உண்மையில்லை என்பதை விவரிக்கிறது இந்த பதிவு.

விமானங்களின் கேபின்களில் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை சுத்தமான காற்றால் நிரப்பப்படுகிறது என அறிவீர்களா? ஆம், விமானம் பறக்கும் போது, வெளிப்புறத்தில் இருக்கும் சுத்தமான காற்று விமானத்தினுள் கலக்கப்படுகிறது. வெளிப்புற காற்று பயணிகள் அமரும் பகுதியான கேபினை வந்தடையும் முன் அதிக வெப்பநிலை கொண்ட கம்ப்ரெசர், ஓசோன் ப்யூரிபையர் உள்ளிட்ட சாதனங்களை கடந்து சுத்தமாக்கப்படுகிறது.
வெளிப்புற காற்று சுத்தப்படுத்தப்பட்டு அதன்பின்பே அது கேபினுள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்த வழிமுறை தான் ஒவ்வொரு 2 முதல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இவ்வாறு காற்றை சுத்தப்படுத்த ஹெச்.இ.பி.ஏ. அதாவது மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுவதற்கு இணையான தரம் கொண்ட ஏர் பில்ட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வெளிப்புற காற்று ஹெச்.இ.பி.ஏ. பில்ட்டர் கொண்டு சுத்தப்படுத்தப்படுவதால், காற்றில் இருக்கும் அனைத்து விதமான வைரஸ் மற்றும் கிருமிகள் 99.97 சதவீதம் வரை கொல்லப்படுகிறது. இத்தகைய தரமுற்ற காற்று மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அறைகளில் இருப்பதற்கு இணையானவை ஆகும். இத்தனை சுத்தமான காற்று விமான பயணிகளுக்கு ஏன் அச்சுறுத்தலை ஏற்படுத்த போகிறது.

கேபின்களில் சுத்தமான காற்று எந்நேரமும் வந்து போக செய்வதுடன், விமான நிறுவனங்கள் விமானத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து செய்கின்றன. அந்த வகையில், மற்ற போக்குவரத்து முறைகளை விட விமான பயணம் மிகவும் பாதுகாப்பானது ஆகும். 
என்ன தான் தொழில்நுட்ப வசதிகள் நம் பாதுகாப்பை உறுதி செய்தாலும், தனிமனித ஒழுக்கம், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது, முகக்கவசம் அணிவது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதே நம் பாதுகாப்பிற்கு சிறந்த பலனை தரும்.

Source : https://www.maalaimalar.com/technology/technologynews/2020/09/08132351/1865768/How-Airplane-Ventilation-Actually-Works.vpf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *