நாயிடமிருந்து தங்கையைக் காப்பாற்றி படுகாயமடைந்த 6 வயதுச் சிறுவன்: புகழ்ந்து தள்ளும் சர்வதேச பிரபலங்கள் | நாய் | walker instagram post
அமெரிக்காவில் நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றிய 6 வயதுச் சிறுவன் பற்றிய பதிவு வைரலாகியுள்ளது.
கடந்த 9-ம் தேதி அன்று அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தின் சயன் நகரில் வசித்து வரும் பிரிட்ஜர் என்ற சிறுவன், தனது தங்கையை ஒரு நாய் தாக்க வருவதைப் பார்த்து, உடனடியாக முன்னால் பாய்ந்து தடுத்துள்ளார். இதனால் பிரிட்ஜரின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. ஆனாலும், தங்கையை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடிக் காப்பாற்றியுள்ளார்.
இதுகுறித்து பிரிட்ஜரின் அத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
“என் சகோதரரின் மகன் ஒரு நாயகன். தாக்க வந்த நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றியிருக்கிறான். அவனே முன்னால் வந்து நின்று தங்கையைப் பாதுகாக்க நாயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளான். இதுபற்றிக் கேட்டபோது, ‘அங்கு யாராவது இறந்து போக வேண்டும் என்று இருந்திருந்தால் அது நானாக இருக்கட்டும் என்று நினைத்தேன்’ என்று சொன்னான். நேற்றிரவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான்.
அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட மற்ற நாயகர்களிடம் இந்தத் தகவலைச் சென்று சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களுக்குத் துணையாக இன்னொரு நாயகன் வந்திருக்கிறான் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இது அவர்கள்வரை செல்லுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன்”.
இவ்வாறு பிரிட்ஜரின் அத்தை கூறியுள்ளார்.
மேலும், ஹல்க்காக நடித்த மார்க் ரஃபல்லோ, தாராக நடித்த க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த், அயர்ன்மேன் ராபர்ட் டவுனி ஜூனியர் என பல்வேறு நாயகர்களை அவர் டேக் செய்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் பிரிட்ஜரின் முகம் படு மோசமாகக் காயமடைந்துள்ளது. கிட்டத்தட்ட 90 தையல்கள் பிரிட்ஜரின் முகத்தில் போடப்பட்டுள்ளன. ஆனாலும், பிரிட்ஜர் நம்பிக்கையுடன் இருப்பதாக அவரது அத்தை தெரிவித்துள்ளார்.